நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

சட்டம் ஒழுங்கு உத்தர பிரதேசத்தில்...

சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது உத்தர பிரதேசத்தில். ஒவ்வோர் இந்தியனும் வெட்கித் தலைகுனிய வேண்டிய இழிவானதொரு தேசிய அவமானத்தை இந்தியா எதிர்கொண்டுள்ளது.

உத்தரபிரேத மாநிலம், பதாயூன் மாவட்டத்தில் உள்ள கத்ரா கிராமத்தில் கடந்தவாரம் 14 மற்றும் 15 வயது தலித் சிறுமிகள் (சகோதரிகள்) 2 பேர் ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். பின்னர் இருவரையும் உயிருடன் ஒரு மாமரத்தில் தூக்கில் தொங்கவிட்டனர். இந்த சம்பவத்திற்கு உள்நாட்டு தலைவர்கள் மட்டும் இன்றி .நா.வும் கண்டனம் தெரிவித்திருந்தது

  • 2 2வயது பெண் ஒருவர் உத்தர பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு, ஆசிட் குடிக்க வைக்கப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

  • அலிகரில் பெண் நீதிபதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. உடல் முழுவதும் காயங்களுடன் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மயங்கிய நிலையில் அவர் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வீட்டில் பாதி பாட்டில் பூச்சிமருந்து கிடந்தது. விஷமிகள் அவரை பலாத்காரம் செய்து அவருக்கு வலுக்கட்டாயமாக பூச்சி மருந்து கொடுத்திருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நீதிபதியின் நிலைமை மோசமாக உள்ளது.

  • உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது 6 பேரால் கடத்தி கொலை செய்யப்பட்டு மரத்தில் பிணமாக தொங்கவிடப்பட்டுள்ளார்.

  •  உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகர் அருகே உள்ள கிதோர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி சனிக்கிழமை மாலை இயற்கை உபாதையை கழிக்க தனது வீட்டுக்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது 20 முதல் 25 வயது வரை உள்ள கௌதம், அவ்னீஷ், சுனில் மற்றும் புரே ஆகியே 4 வாலிபர்கள் சிறுமியை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் நடந்தது பற்றி யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று அவர்கள் சிறுமியை மிரட்டியுள்ளனர். சிறுமி மயக்கம் அடைந்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
  • தற்போது காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் 25 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்

இப்படி அகிலேஷ் யாதவ் ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது, அடுத்தடுத்து பலாத்காரங்கள் நடக்கிறது. அவரோ மீடியாக்கள் தான் தனது மாநிலத்தில் நடப்பதை பெரிதுபடுத்துவதாக தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, அவருடைய அலட்சிய பதில்,
 "உத்தரபிரதேசத்தில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதில்லை. நாடு முழுவதும் நடைபெறும் பலாத்கார சம்பவம் குறித்த புள்ளி விவரத்தை என்னால் கொடுக்க முடியும். இது கூகுள் காலம். தேவைப்பட்டால் கூகுளில் சென்று தேடிப்பாருங்கள், எத்தனை சம்பவங்கள் இதுபோல நடந்துள்ளன என்ற விவரத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஆனால் .பியில் நடைபெறும் பலாத்காரத்தை மட்டுமே ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகின்றன"

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு .பி தலைநகர் லக்னொவில் முதல்வர் அகிலேஷ் யாதவிடம் தொடரும் பாலியல் பலாத்கார பிரச்சினை குறித்து பெண் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த அவர் "நீங்கள் (பத்திரிகையாளர்கள்) ஏதாவது பிரச்சினையை அனுபவிக்கிறீர்களா? உங்களை யாரும் பலாத்காரம் செய்யவில்லையே, நீங்கள் பாதுகாப்பாகத்தான் உள்ளீர்கள். அப்புறம் எதற்காக கவலைப்படுகிறீர்கள்?" என்று ஆத்திரத்தில் பேசியுள்ளார்.  

மேலும் அவர் கூறுகையில், எந்த மாநிலத்தைவிடவும் சிறப்பான காவல் துறை கட்டுப்பாட்டு அறை உத்தரபிரதேசத்தில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கு ஹெல்ப் லைன்களை திறந்துள்ளோம். ஆபத்து என்று அழைப்பு வந்தாலே போதும் உடனே போலீசார் அங்கு இருப்பார்கள் என்று கூறிவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டு நடையை கட்டிவிட்டார்.

இதில்வெட்ககேடு பெண் நீதிபதி ஒருவர்  பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி கொலை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதுதான். ஒரு நீதிபதிக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் கதி என்ன, ஒதுக்கப்பட்ட சிறுபான்மையினரின் கதி என்ன?

மேலும் பொறுப்பான பதவியில் உள்ள முதல்வர்  இந்த சம்பவங்களுக்காக வெட்கி தலை குனிய வேண்டும். அதை விடுத்து அலட்சியமாக கூகிள் போய் பாருங்கள், பெண் செய்தியாளரை நீங்கள் பாதுகாப்பாகத்தானே  உள்ளீர்கள், அப்புறம் எதற்காக கவலைப்படுகிறீர்கள் என்று வசை பாடியுள்ளார்.

காங்கிரஸின் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் போன்ற அரசியல் தலைவர்கள் எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பதுபோல அரசியல் ஆதாயம் தேடி பதாயூன் நோக்கிப் படையெடுக்கிறார்கள். சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி என்று ஒருவர் மாறி ஒருவர் ஆட்சி செய்யும்போது அவரவர் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு காவல்துறையில் முன்னுரிமையும், மேலதிகாரமும் அளிப்பதால் ஏற்படும் விபரீதங்கள்தான் இவை என்பதை அனைவருமே தெரிந்தும் தெரியாததுபோல நடிக்கிறார்கள். இப்போது, மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு இந்த வழக்கு உள்படுத்தப்பட்டிருப்பதால், சிறுமியரின் உயிரைக் காப்பாற்ற முடியாவிட்டாலும் நீதியாவது நிலைநாட்டப்படும் என்று எதிர்பார்ப்போம்.

இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில், ஒவ்வோர் இரண்டு நிமிடத்திலும் ஏதோ ஒரு பெண்ணுக்கு எதிரான தாக்குதல் நடைபெறுகிறது. ஒவ்வோர் இரண்டு மணி நேரத்திலும் குறைந்தது ஆறு பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகின்றன. ஒவ்வொரு நாளும் 16 குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு பலியாகிறார்கள். ஐந்து பாலியல் வன்முறைப் புகார்களில் ஒரு புகார் பதிவு செய்யப்படாமல் தவிர்க்கப்படுகிறது. பதிவு செய்யப்படும் பாலியல் வன்முறைப் புகார்களில் 20% வழக்குகளில் மட்டும்தான் தண்டனை வழங்கப்படுகிறது.

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு - பாரதி