நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

குறையும் நிலத்தடி நீர் மட்டம்...அபாயத்தில் இந்தியா

தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கியுள்ள நிலையில் இந்தாண்டுக்கான பருவமழை குறித்த தகவலை வெளியிட்டு, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் , "ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் மேற்கு பருவமழை காலத்தில் 93 முதல் 96 சதவீதம் வரை மழை பெய்யும். இது சராசரியை விட சிறிது குறைவு. இதனால் சில இடங்களில் குறைவான அளவு மழை பெய்யலாம். ஜூன் மாதத்தில் 93 சதவீதமாக இருக்கும் மழையின் அளவு ஆகஸ்ட்டில் 96 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பசிபிக் பெருங்கடலில் வெப்ப நிலை அதிகரிப்பதால் ஏற்படும் "எல் நினோ" வால் மழை அளவு குறையும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதனால் இந்தியாவில் மழை பொழிவில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது" என்று கூறியுள்ளார்.

ஆண்டுக்கு ஆண்டு பருவமழை சராசரியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறித்து, மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

நீர்வள ஆதார விவர குறிப்பு மைய ஆய்வு மூலம் தமிழகத்தில் திருவண்ணாமலை, கோவை, தேனி, திருச்சி, திருநெல்வேலி உட்பட 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளதுஇதற்காக அமைக்கப்பட்டுள்ள 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்படுகிறது.

தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் நீர் அளவு, மொத்தமாக ஒவ்வொரு மாதமும் நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்படுகிறது. அது புள்ளிவிவரங்களாக தொகுக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததும், அதிகப்படியான நிலத்தடி நீர் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டதன் காரணமாக நிலத் தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது

கடந்த மே மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 2013, மே மாதத்தை ஒப்பிடுகையில் தமிழகத்தில் திருநெல்வேலி, திருவண்ணாமலை, தேனி, கோயமுத்தூர், திண்டுக்கல், திருச்சி உட்பட 21 மாவட் டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. கன்னியாகுமரி, கரூர், கடலூர், நீலகிரி உட்பட 11 மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டின் (2013) ஆரம்பத்தில் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியாவில் ஐதராபாத் நகரமும், சென்னையும் வறண்ட நகரங்களாகி வருகின்றன என்றும்இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த நகரங்களின் நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்குப் போய்விடும். நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்படுவதால் சாக்கடை கழிவுகள் நிலத்தடிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்றும் இதனால் நோய் பரப்பும் தன்மை அதிகரித்துள்ளது என்றும் கூறியிருந்தது

இது தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் கண்டறியப்பட்டு, பின்வருமாறு அறிக்கை வெளியிட்டது.

"கடந்த சில ஆண்டுகளாகவே சரியான அளவில் பருவமழை பெய்வதில்லை. பருவ மழை குறைந்து போனதால் விவசாயம் பொய்த்துப்போய் உள்ளது. குளம், ஆறு, வாய்க்கால்கள் வறண்டு நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.

ஹைதராபாத், சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. வரும் 3 ஆண்டுகளில் ஆந்திர பிரதேசத்தில் நிலத்தடி நீரே இல்லாமல் வறண்டு விடும்.மழை பெய்யும்போது 16 சதவீத நீராவது நிலத்துக்குள் சென்றால் தான் நிலத்தடி நீர் மட்டம் சரியாக இருக்கும். ஆனால் மேற்சொன்ன பெருநகரங்களில் 8 சதவீத நீர் கூட நிலத்தடிக்கு செல்லவில்லை.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட 451 நகரங்களில் தண்ணீர் மாதிரி எடுத்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 247 மாதிரிகளில் உயர்ந்த அளவில் குளோரைடு, புளோரைடு, நைட்ரேட் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தவிர சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. நோய் பரப்பும் தன்மை உள்ளது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

ஐதராபாத் நகரைப் போல வறண்ட நகரமாகிவரும் சென்னையில் நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்படுகிறது. இதனால் சாக்கடை கழிவுகள் நிலத்தடிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. நோய் பரப்பும் தன்மை உள்ளது.

சென்னையைத் தவிர அபாயகரமான நிலையில் பெரம்பலூர் மாவட்டம் உள்ளது. அடுத்ததாக நாமக்கல், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதால் நிலத்தடியில் வெற்றிடம்தான் காணப்படுகிறது. மேலும் குடிநீர் பற்றாக்குறையும், மோசமான நீரால் நோய் பரவும் அபாயநிலையும் காணப்படுகிறது.

இந்த நிலையை தவிர்க்க மழை நீர் சேகரிப்பு அமைப்பை அனைவரும் ஏற்படுத்தி, மழை நீரை நிலத்திற்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கட்டாய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது"

கடந்த 2001ம் ஆண்டு முதலே தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் அமலில் உள்ளது. ஆனால் அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதுதான் தெரியவில்லை.

கடந்த ஜனவரி 2013 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், அப்போதைய மத்திய அரசின் தேசிய நீர் சட்ட வரைவு மசோதாவில்  நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படவேண்டும் என்ற அம்சம் முன்னிறுத்தப்பட்டு,  தமிழக அரசும், விவசாயிகளும் அதற்க்கு கண்டனம் தெரிவித்தது நினைவிருக்கலாம்.

இம்மண்ணில் மண், பொன், பெண் இந்த மூன்று பொருளுக்காக எத்தனையோ போர்கள் நடைபெற்றன என்பது வரலாறு. ஆனால் தற்போதுள்ள நிலையில்  இனி ஒரு போர் நடந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்தியாவிலேயே அண்டை மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கிடுவதில் பிரச்சினை உள்ளது.

தண்ணீரை பாதுகாக்க மத்திய அரசும் பல்வேறு  முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்பேரில் முந்தைய மத்திய அரசும் சில முடிவுகளை அறிவித்தது. ஆனால் அதில் விவசாயிகளுக்கு பாதகமான அம்சங்களும் இடம்பெற்று இருந்தன. தண்ணீர் கூட தனியார் மயமாகும் என்ற அச்சமும் எழுந்தது.

நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீரின் தேவை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் விரைவாக குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டியது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமையாகும்.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற தேசிய நீர் வள கவுன்சில் கூட்டத்தில் தேசிய நீர் சட்ட வரைவு கொண்டு வரப்பட்டு, தேசிய நீர் வளக் கொள்கை 2012 என்று அறிமுகப்படுத்தப்பட்டது.
அதில் பின்வரும் அம்சங்களும் அடங்கும்,
  • தண்ணீரை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும் தண்ணீர் ஒழுங்கு முறைஆணையம் என்ற ஆணையத்தை அமைக்கவேண்டும். இந்த ஆணையம் தண்ணீருக்கு கட்டணம் விதிக்கவேண்டும். பயன்பாட்டுக்கு ஏற்ப தண்ணீருக்கு கட்டணம் வசூலிக்கவேண்டும். இந்த கட்டணவிகிதம் ஆண்டு தோறும் மாற்றப்படவேண்டும். நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கப்படுதல் வேண்டும்.
  • அந்தந்தபகுதிகளில் ‘‘ தண்ணீர்பயன்படுத்துவோர்சங்கம்" என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்தஅமைப்பினர், பயன்படுத்தப்படும் தண்ணீருக்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும். அவரவர் எல்லைக்குள் தண்ணீர் வழங்கும் முகமையாக இவர்கள் செயல்படவேண்டும்
  • ஆற்றுப்படுகைகள்நீர்நிலைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தவேண்டும். நீர்நிலைகளில் உள்ள எல்லா ஆக்கிரமிப்புகளையும் அப்புறப்படுத்தி, நீர்நிலைகளில் நீர் சென்று சேர வழிவகை செய்யவேண்டும்
  • தண்ணீர் மாசுபடுவதை தவிர்க்கவேண்டும். தண்ணீரின் நீரோட்டகோணத்தை மாற்றக்கூடாதுநிலத்தடி நீர்மட்டம் உயர்வதை உறுதிசெய்யவேண்டும். அணைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். அதற்கான சரியான திட்டமிடல்கள் இருத்தல் வேண்டும்.
  • தண்ணீரை சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்தவே நீர் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதுஇதன்படி தண்ணீரை வர்த்தகபொருளாக கருதலாம். தண்ணீர் குறித்த சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இருந்தாலும் தேசிய அளவிலான பொதுக்கொள்கை உருவாக்கப்படும். அதே நேரம் மாநில அரசின் விவகாரங்களில் மத்திய அரசுதலையிடாது. தண்ணீரை விநியோகிக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்படும் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டு சட்ட முன் வடிவை அரசுவகுத்துள்ளது.
இந்த சட்ட முன் வடிவுகள் சட்டமானால் நாம் பயன்படுத்தும் தண்ணீருக்கும் பணம் கட்ட வேண்டும் என்பதும், தண்ணீர் விநியோகம் தனியார் மயமாகும் என்று தமிழகம் அதற்க்கு கண்டனம் தெரிவித்தது. இந்த முடிவு விவசாயிகளுக்கு பலத்த அடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வறட்சி மற்றும் வெள்ளக்காலங்களில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம் போன்ற கருத்துகள் நீர் கொள்கை 2012 ல் இடம் பெற்றிருந்தது. எல்லாம் சட்டமாக  இருந்ததே தவிர செயல்படுத்தப்பட்டதாக தெரியவில்லை

இந்தியாவில் மழை பொய்த்த போதிலும்நிலத்தடி நீர் மட்டம் குறைந்த போதிலும் பெருவாரியான மக்கள் மிகக் குறைந்த வருவாயுடன் ஈடுபட்டிருக்கும் தொழில் விவசாயம்தான். அவர்களில் 65% பேர் கடன் சுமையால் வாடுகிறார்கள். கடந்த 17 ஆண்டுகளில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் கடன் சுமையால் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். மொத்த உற்பத்தி மதிப்பில் விவசாயத்தின் பங்களிப்பு தொடர்ந்து குறைந்து குறைந்து இப்போது வெறும் 13% ஆக இருக்கிறது. தேசத்திற்கு உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளில் பெரும்பாலோர் தினமும் வயிற்றில் ஈரத்துணியுடன்தான் இரவு படுக்கையில் சாய்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை.

2007
முதல் 2012 வரையிலான புள்ளிவிவரப்படி, மூன்று கோடியே இருபது லட்சம் பேர், விவசாயத்தைத் துறந்து அருகிலுள்ள நகர்ப்புறங்களில் கூலி வேலை தேடிக் குடியேறி இருக்கிறார்கள். 2011 மக்கள்தொகைக் கணக்குப்படி, தினந்தோறும் 2,500 விவசாயிகள் விவசாயத்தைத் துறந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது விவசாயத்தில் ஈடுபட்டிருப்போரில் 42% பேர், வாய்ப்புக் கிடைத்தால் விளைநிலங்களை விற்றுவிட்டு வேறு வாழ்வாதாரம் தேட விழைபவர்கள்தான்.

நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும் இயற்கை வளங்களால் சாமானியர்களின் வாழ்வு கேள்விக்குரியதாக இருக்கிறது. இந்நிலையில்  ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன்  ஒரு பேட்டியில், "விவசாயத்திலிருந்து வேறு தொழிலுக்கு விவசாயிகளை மாற்றுவதுதான் வளர்ச்சியின் நோக்கம்" என்று கூறியுள்ளார்.

உணவு உற்பத்திக்கு வழிகோலி, தங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தைப் புறக்கணித்து விட்டு, நகர்ப்புறங்களில் காவல்காரர்களாகவும், ரிக்ஷா ஓட்டிகளாகவும், கட்டடப் பணியில் சித்தாள்களாகவும் மாறுவது என்ன வளர்ச்சி, என்ன முன்னேற்றம் என்பது எனக்குப் புரியவில்லை .

இதற்கிடையே அடுத்த மாதம் தான் தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலையறிக்கை தொடர்பாக, நிதியமைச்சர் அருண் ஜேட்லி விவசாயம் தொடர்பான அமைப்புகளையும், எம்.எஸ். சுவாமிநாதன் தொடங்கி பல வல்லுனர்களையும் அழைத்துப் பேசியிருக்கிறார். நீர் ஆதாரம் குறைந்து வருவது, பல பாசனத் திட்டங்கள் தாமதப்படுவது, விவசாயிகளுக்காகவே ஒரு தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுவது போன்ற விஷயங்கள் அச்சந்திப்புகளில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அரசு எதிர்கொண்ட நிலையிலும் விவசாயத்திற்கும் விவசாயிகளின் பிரச்னைகளுக்கும் அரசு முன்னுரிமை கொடுக்கும் என்கிற நிதியமைச்சரின் உறுதிமொழி ஆறுதல் அளிக்கிறது. பொறுத்திருந்து பார்போம்.