நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

ஸ்மிருதிஇரானி கல்வித்தகுதி சர்ச்சை

கல்வித்தகுதி குறித்து பொய்யான தகவல் அளித்ததாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு எதிராக புகார் எழுந்துள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சட்டவல்லுனர்களால்  கூறப்படுகிறது.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில், டிவி நடிகை ஸ்மிருதி இரானி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் கமிஷனுக்கு அவர் அளித்த பிரமாண பத்திரத்தின் 11-ம் பக்கத்தை பார்த்தால் அவரது படிப்பு பற்றிய தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது . டெல்லி மேல்-சபை எம்.பி.யில் அவர் தனது கல்வித் தகுதியை மறைத்து இருக்கிறார் / சரியான தகவலை அளிக்கவில்லை.

இவர் கடந்த 2004ம் ஆண்டு டெல்லியில் சாந்தினி சவுக் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கபில் சிபலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அப்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர் 1996-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி கல்வி உதவியுடன்  பி.. படிப்பை முடித்ததாக தனது வேட்பு மனுவுடன் இணைத்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த 2011ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அப்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பி.காம் படித்திருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் (2014) உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இந்த முறை அவர் 1994-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் பகுதி-1-ல்(அஞ்சல் வழிக்கல்வி) இளநிலை பட்டம் பெற்றிருப்பதாக வேட்பு மனுவுடன் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

பிளஸ் 2 படித்தவர் கல்வி அமைச்சரா என்று காங்கிரசை சேர்ந்த அஜய் மக்கான் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இந்த விவரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன. இதற்கிடையே டெல்லி பல்கலையில் எந்த பட்டத்தையும் அவர் பெறவில்லை என்பதையும் அதற்கு ஆதாரமான சான்றிதழ்களையும் அங்கு பணிபுரிந்த 5 ஊழியர்கள் பத்திரிகை ஒன்றுக்கு அளித்தனர். இதனிடையே தனது கல்வி தகுதி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த இரானி, தனது செயல்பாடுகளை பார்த்து தனது திறமையை மதிப்பிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  

இந்நிலையில் வேட்பு மனுவில் பொய் தகவல் அளித்த இரானி மீது வழக்கு தொடர்ந்து குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 6 மாத சிறை தண்டனை கிடைக்கும் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது எம்.பி. பதவியோ, அமைச்சர் பதவியோ பறிபோகாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில் வேட்பு மனுவில் பொய் தகவல் அளித்ததற்காக இரானி மீது நடவடிக்கை எடுக்க போவதில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. என்ன கொடுமைடா இது, நாடாளும் அமைச்சர் பொய்யான தகவல்கள் கொடுத்தாலும், அது நிரூபிக்கப்பட்டாலும் அதற்கு 6 மாத சிறை தண்டனை மட்டும் தான் தீர்வா? இதுதான் இந்திய அரசியல் சட்டமா?

வாழ்க பாரதம்! வாழ்க ஜனநாயகம்!