நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

மரியா ஷரபோவா - டெண்டுல்கர் யாரு?


ஊடகங்களில் ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் யார் என தெரியவில்லை என்ற செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. நமது இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் தங்கள் பங்குக்கு ட்வீட்டர், முகநூல் மற்றும் இதர வலை தளங்களில் மரியா ஷரபோவாவை நாறடித்து விட்டார்கள்.

சச்சினைத் தெரியாது என்று ஷரபோவா கூறியதற்காக திட்டித் தீர்க்கும் நம்மவர்கள் எத்தனை பேருக்கு ரிச்சி மெக்கவா் தெரியும்.. எத்தனை பேருக்கு குவாத் கூப்பரைத் தெரியும்...? இவர்கள் இருவரும் வேறு யாருமல்ல, உலகப் புகழ் பெற்ற ரக்பி வீரர்கள்.. சரி ரக்பி விளையாட்டுப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்.. ரக்பி நம்ம நாட்டில் ஆடப்படுகிறதா என்பதாவது தெரியுமா?

அதையெல்லாம் விடுங்க.இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் யார் என்று எத்தனை இந்தியர்களுக்குத் தெரியும்.அதற்காக ஹாக்கி ரசிகர்கள் எல்லாம் தெரியாதவர்களைத் திட்டிக் கொண்டா இருக்கிறார்கள்.இல்லையே. இந்திய கைப்பந்து அணியின் கேப்டன் யார், இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டன் யார், நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.சரி, அதை விடுவோம்.இந்திய கபடி அணியின் கேப்டன் பெயர் தெரியுமா? இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் யார்? தெரியுமா நமக்கு?

மரிய இருதயம் யார் என தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்?

கேரம் விளையாட்டில் உலக அளவிலும் தேசிய அளவிலும் பல சாதனைகள் புரிந்த தமிழர். 1995ல் சர்வதேச கேரம் போட்டியில் வென்று உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். இரட்டையர் பிரிவுக்கான உலக சாம்பியன் பட்டத்தை இரு முறை பெற்றுள்ளார். தேசிய சாம்பியன் பட்டத்தை மட்டும் 9 முறை வென்றுள்ளார். 1996ல் மரிய இருதயத்துக்கு இந்திய் அரசு அர்ஜூனா விருது கொடுத்து கௌரவப்படுத்தியது. இவர் தற்போது சென்னை பெரியமேடு பகுதியில்தான் வசிக்கிறார்

 இத்தனை சாதனைகள் செய்தும் இவரை யாரும் கண்டு கொள்ளாதது மட்டும் அல்ல, அவரே சொல்வது போல் "ஒன்பது முறை இந்திய சாம்பியன் பட்டம் வாங்கியும் என்னை பற்றி ஒரு பத்திரிக்கையில் கூட துண்டு செய்தி கூட வரவில்லை. சரி, உலக சாம்பியன் பட்டம் பெற்ற பின் அதை எழுதியே தீர்வார்கள் என நினைத்தேன். ஆனால் அதைகூட எந்த பத்திரிக்கையிலும் எழுதவில்லை.."

இவரது மனைவி ஸ்கூட்டரில் பில்லியனில் உட்கார்ந்து வருகையில் லாரி மோதி மரணம் அடைந்தார். கார் ஓட்டும் பொருளாதார நிலையில் எல்லாம் அவர் இல்லை. இந்த நிலையில் தான் இந்திய விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். நாம் அதனால் மரியா ஷரபோவாவை குற்றம் சொல்வதில் பொருள் இல்லை.

நம் நாட்டில் விளையாட்டு ரசிகர்கள் என்றால் அவர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு கிரிக்கெட் மாயை இங்கு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எனவேதான் கிரிக்கெட் வீரர்கள் யாரையாவது இப்படி யாராவது கூறி விட்டால் குமரி முதல் காஷ்மீர் வரை கொந்தளித்து விடுகிறார்கள்.

கிரிக்கெட் எத்தனை நாடுகளில் உள்ளது. விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் டென்னிஸ், கால்பந்து, கூடைப் பந்து இதெல்லாம் கிரிக்கெட்டை விட உலகப் புகழ் பெற்ற விளையாட்டுக் கள். ஏன். கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் கூட சேர்க்க முடியாது என்று கூறி விட்டார்கள். இதிலிருந்தே தெரியவில்லையா  கிரி்க்கெட் விளையாட்டின் புகழ் என்னவென்று?
சச்சின் பெரிய கிரிக்கெட் வீரர்தான். சாதனையாளர்தான். சந்தேகமே இல்லை.ஆனால் ரஷ்யாவில் சச்சினைப் பற்றி எப்படித் தெரிந்திருக்க முடியும். மதுரை அலங்காநல்லூரில் போய் அங்கிருப்பவரிடம் மரியா ஷரபோவா யாரென்று கேட்டால் அவர் எப்படிச் சொல்வார்?
 
ஷரபோவாவின் ரஷ்யாவில் கிரிக்கெட்டே கிடையாது. அங்கிருப்பவர்களுக்குக் கிரிக்கெட்டையும் தெரியாது. கிரிக்கெட் தெரியாத ஒரு நாட்டுக்காரரிடம் ஏன் சச்சினைத் தெரியாமல்  போய் விட்டது என்று சண்டைக்குப் போய் அவரை அவதூறாக பேசுவது சரியா?

ரஷ்யாவை விடுங்க, கொலம்பியா, அர்ஜென்டினா, உருகுவே, மெக்சிகோ, ஜப்பான், வியட்நாம், தைவான் என உலகின் பெரும்பாலான நாடுகளில் போய்க் கேட்டால் சச்சின் என்றால் யார் என்றுதான் கேட்பார்கள். ஆனால் சச்சினைத் தெரியாது என்று சொல்வதில் எந்தத் தவறும் நிச்சயமாக கிடையாது, இது அவருக்கு அவமரியாதையும் அல்ல. மற்ற விளையாட்டுக்களைப் போல கிரிக்கெட்டும் ஒரு விளையாட்டு. அதில் இருப்பவர்களுக்குத்தான் மற்ற கிரிக்கெட் வீரர்களை நன்றாகத் தெரிந்திருக்கும். மாறாக மாரடோனாவிடம் போய் மரிய இருதயம் குறித்துக் கேட்டால் அவர் கடுப்பாகத்தான் பார்ப்பார்.

தெரியாத விளையாட்டைப் பற்றியும், தெரியாத விளையாட்டுக்காரர்களைப் பற்றியும் சம்பந்தமில்லாதவர்களிடம் போய் கேட்டு அவர்கள் சொன்ன பதிலை வைத்து இவ்வளவு  பெரிய சர்ச்சையை ஏற்படுத்துவது நியாயமா!

நாட்டில் சரி செய்ய வேண்டிய / கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகள் 1000 இருக்க, ஒன்றும் இல்லாத இந்த செய்திக்கு முக்கியத்துவம் அளிப்பது முறை தானா?
போங்கப்பா போய் வேற வேல இருந்தா பாருங்க, வெட்டியா இருந்தா தான் அடுத்தவன் பிரச்சனைல மூக்க நுளைக்கனும்னு தோணும்.