நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

காமராஜர் பிறந்த தினம் - ஜூலை 15



கர்மவீரர், பெருந்தலைவர், காந்தியவாதி, கல்வித்தந்தை, கிங் மேக்கர் காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசுஎன்று ஆனது.

தனது பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார்.
சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக் கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ.வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரசின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார்.

மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராசர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936ல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்திய மூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் தன் பணியைத் தொடங்கினார்.

இவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது

காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். இவரின் சாதனைகளை அறிய இங்கே சொடுக்கவும்.

மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை பதவி விலகல் செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9-ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், எஸ்.கே.பாட்டீல், ஜெகஜீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.

அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி அவர்களை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாசுதிரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.

"இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். ஒரு மாசு குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்" என்ற கண்ணதாசனின் வரிகள் காமராஜருக்கே பொருந்தும்.