11.7.2014 அன்று மாலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்தில், ஒரு பொது நிகழ்ச்சி, அதாவது சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி அவர்கள் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.அரி பரந்தாமன் அவர்களும் மற்றும் அவரோடு சில மூத்த வழக்கறிஞர்களும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்திற்குள் செல்ல முயன்ற போது, வேட்டி அணிந்து இருந்தனர் என்ற ஒரே காரணத்தைக் காட்டி, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.
இதைப் பற்றி தினமணி நாளிதழில் இன்று நச்சென ஒரு தலையங்கம் வந்திருக்கிறது. அது பின்வருமாறு,
"தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வேட்டி கட்டிச் சென்ற மூன்று பிரபலங்கள், உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பது இப்போது சட்டப்பேரவைக்கு உள்ளும் புறமும் பேசப்படும் விவகாரமாக மாறிவிட்டது. வேட்டி தமிழனின் பாரம்பரிய உடை. வேட்டி அணிந்து வந்தால் உள்ளே விடமாட்டேன் என்று சொல்வது ஆதிக்க மனப்பான்மை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மனம் வருந்தி கூறியிருக்கிறார். இன்னும் பல கட்சித் தலைவர்களும் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
ஒரு கிளப் அல்லது மன்றத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்கு வருவோர் இப்படித்தான் உடை அணிந்து வர வேண்டும் (டிரஸ் கோட்) என்று கூறினால் அதை ஆதிக்க மனப்பான்மை என்று கூற முடியுமா? கிளப்புகளை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அளவுக்கான விவகாரமா இது?
கிரிக்கெட் கிளப் மட்டுமல்ல, சென்னை "ஜிம்கானா கிளப்'பிலும் இத்தகைய நடைமுறை உள்ளது. அங்கே நீங்கள் வெறும் கால்சராய் அணிந்து சென்றால் மட்டும்போதாது. ஷூ அணிந்திருக்க வேண்டும். வெறும் செருப்பு மாட்டிக்கொண்டு போனால் உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.
ஒரு பிரமுகரை பேட்டி எடுக்கச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர், "ஜிம்கானா கிளப்'பில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒரு வாரப் பத்திரிகையில் எழுதினார். ஆனால் அப்போது எந்த அரசியல்வாதியும் "ஜிம்கானா கிளப்'புக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. இப்போது, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நீதிபதி, இரண்டு பேர் வழக்குரைஞர்கள் என்பதால்தான் குரல் கொடுக்கிறார்கள். சட்டப்பேரவையிலும் உறுப்பினர்கள் "பேண்ட்' போட்டுக்கொண்டு வேட்டியின் பெருமையைப் பேசுகிறார்கள்.
சில கல்லூரிகளில், மாணவ - மாணவிகள் எந்தெந்த ஆடைகளை உடுத்தக்கூடாது என்று ஒரு ஒழுங்குமுறையை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இதற்கும் எதிர்ப்பும் ஆதரவும் உண்டு. ஆனால், இவ்விஷயத்தில் அரசு தலையிட்டதில்லை.
சில கோவில்களில், ஆடவர் சட்டை அணியாமல் செல்ல வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. சில கோவில்களில் பேண்ட் அணிந்திருந்தாலும் அதன் மீது ஒரு வேட்டி அல்லது துண்டை சுற்றிக்கொண்டுதான் உள்ளே போக முடியும். பெண்கள் சுரிதார் அணிந்து வந்தால் துப்பட்டாவுடன் வருவது கட்டாயம். அந்த துப்பட்டாவையும்கூட கழுத்தில் மப்ளர் மாதிரி சுற்றிக்கொள்ளாமல், எப்படி அணிந்து வர வேண்டும் என்று படம்கூட கோவில் வாசலிலேயே வைக்கப்பட்டுள்ளது. இதை ஆதிக்க சாதிகளின் அடாவடி என்பதா? அல்லது கோவில் ஒழுங்கு என்று ஏற்றுக்கொள்வதா?
கோவிலுக்குள் சட்டையை கழற்றினால்தான் அனுமதி என்கின்றபோது, அது ஆதிக்க மனப்பான்மை என்று கண்டனக் குரல் எழுப்புவதைக் காட்டிலும் அத்தகைய கோவிலுக்குள் நுழையவே மாட்டேன் என்பதுதான் சுயமரியாதை உள்ளவரின் முடிவாக இருக்க முடியும். கோவிலே வேண்டாம், அது கொடியவர்களின் கூடாரம் என்று கருதுபவர்கள் அதைப் புறக்கணிக்க வேண்டுமே தவிர, அதன் நடைமுறைகளை எதிர்த்துப் போராடுவது அநாவசியம்.
வேட்டி தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் என்கிறார்கள். கேரளத்திலும், ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும்கூட வேட்டிதான் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். வேட்டியை தென்னிந்தியர்களின் அடையாளம் என்பதே சரி. அப்படியே வேட்டியைத் தமிழரின் அடையாளமாகக் கொண்டாலும், இதே நீதிபதியும் வழக்குரைஞர்களும் நீதிமன்றத்துக்கு வேட்டியுடன் வருவதில் தடை இல்லையே! அவ்வாறு அவர்கள் வருகிறார்களா? நீதிமன்ற உடை விதிமுறைகளை மீறாதவர்கள், தனியார் கிளப்புகளில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு விவகாரத்தில் இறங்குவது அவர்களது பதவிக்கும் தகுதிக்கும் ஏற்றதா என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாடாளுமன்றம் செல்லும் தமிழகத்தின் அனைத்து எம்.பி.க்களும் வேட்டி அல்லது புடவை அணிந்து செல்வதற்குத் தடையில்லை. ஆனால், எத்தனை பேர் தமிழர் அடையாளமான வேட்டியுடன் நாடாளுமன்றத்துக்கு செல்கின்றனர்?
தமிழனின் அடிப்படை அடையாளம், மெய்யான அடையாளம் தமிழ் மொழிதான். ஆனால் தமிழின் நிலை என்ன? முன்பள்ளி, தொடக்கப் பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக இல்லை. ஆங்கில வழிப் பள்ளிகளின் அட்டூழியம் சொல்லி மாளாது. நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இல்லை. எந்தவொரு தனியார் டிவி நிகழ்ச்சியிலும் தமிழைவிட ஆங்கிலத்திலேயே உரையாடல் அதிக நேரம் அமைகிறது.
அடையாளம் இழந்து வரும் தமிழைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்தாமல், விளம்பரத்துக்காக வேட்டி விவகாரத்தில் இறங்குவது சிறுபிள்ளைத்தனமல்லாமல் வேறென்ன?