இந்த மாதத்தின் தொடக்கத்தில் (ஜூலை 1) சென்னை மௌலிவாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 61 பேர் சடலங்களாகவும், 88 பேர் காயங்களுடன் உயிருடனும் மீட்கப்பட்டனர். கட்டடம் இடிந்து விழுந்தவுடன் அந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் 6 நாள்கள், இரவு, பகல் பாராமல் உயிரை துச்சமென மதித்து, ஒற்றுமையே பலம் என்பதற்கேற்ப மலைப்பாகவும், வியப்பாகவும் இருந்த பணியை அனாயாசமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தமிழ்நாடு காவல் துறை, தமிழ்நாடு அதிரடிப்படை மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை என பல்வேறு துறையைச் சேர்ந்த 3 ஆயிரத்து 750 அலுவலர்கள் ஒருங்கிணைப்புடனும்,
திறமையுடனும் துரிதமாக செயல்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது
வழக்கம் போல் இந்தச் சம்பவத்துக்காக கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டனர். கட்டடக் கலையில் தேர்ந்த பொறியியல் வல்லுநர்களால் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரைபடம் வடிவமைக்கப்பட்டு, தொழில்நுட்ப உதவியுடன் அடித்தளம் அமைக்கப்பட்டு அடுக்குமாடிக் கட்டடங்கள் எழுப்பப்படுகின்றன. ஆனால் விரைவாகப் பணியை முடித்து விற்றுவிட்டு, அடுத்த அடுக்குமாடிக் கட்டடம் எழுப்புவதில் குறியாக உள்ள நிறுவனங்கள்தான், அடுக்குமாடிக் கட்டடங்களை எழுப்புகிறார்களே தவிர, சில லட்சம் முதலீட்டில் செயல்படுபவர்கள் இதில் ஈடுபடுவதில்லை. பல கோடி ரூபாய் முதல் போட்டு தொழில் செய்பவர்கள் என்பதால், குறுகிய காலத்தில் நிறைந்த லாபம் பெறுவது மட்டுமே அவர்களது குறிக்கோளாக இருக்கிறது.
ஆனால், இதுபோன்ற கட்டடங்கள் எந்தவித விபத்தையும் ஏற்படுத்தாத வண்ணம் பார்த்துக் கொள்வது அரசு அதிகாரிகளின் கடமை. சில அதிகாரிகள், சதுர அடிக்கு இவ்வளவு என்று கையூட்டுப் பெற்று வரைபடங்களையும் ஆவணங்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அனுமதி வழங்கினால் விபத்துகள் ஏற்படத்தானே செய்யும்.
கட்டடம் இடிந்து விழுவதற்கு காரணங்கள் பல சொல்ல பட்டாலும் அடிப்படைக் காரணம் முறையான மண் பரிசோதனை நடத்தி, கட்டடங்கள் எழுப்பப்படாதது தான். அடுத்தது அதிக லாபம் ஈட்ட தரம் குறைந்த பொருள்களை கட்டுமானத்தில் பயன்படுத்துவது.
1993 ல், கிராமத்தில் என்னுடைய வீடு கட்டப்படும்போது எங்கள் உறவினர் (மனையடி ஜோசியர்) ராஜூ தாத்தா (அப்போது வயது 68, தற்போது அவர் இல்லை) தான் எங்களுடைய முதல் ஆலோசகர். வீட்டின் வரைபடம் மற்றும் இன்ன பிற ஆய்வுகள் செய்ய/ செயல்படுத்த படித்த பொறியாளர் நியமிக்கப்பட்டு இருந்தாலும், ராஜூ தாத்தாவின் ஆலோசனை இன்றி என் தந்தை எந்த முடிவும் எடுக்க மாட்டார்.
இந்தியப் பாரம்பரியக் கட்டுமானத்தின் முதல் ஆய்வான மண் சோதனை செய்ய திட்டம் தீட்டப்பட்டது. பொறியாளரும் தன்னுடைய படிப்பறிவின் மூலம் மண் மாதிரிகளை சேகரித்து கொண்டு, இன்னும் 3 நாட்களில் உரிய ஆய்வுகளின் முடிவுகளுடன் சந்திப்பதாக கூறிச் சென்றார்.
மறுநாள் ராஜூ தாத்தா வந்து பார்வை யிட்டார். வீடு கட்ட திட்டமிட்டிருந்த இடத்தில் ஒரு சதுர கன அடி அளவுக்குக் குழி வெட்டச்சொன்னார். வெட்டி எடுத்த மண்ணை அதே குழியில் போட்டு நிரப்பச்சொன்னார். 5
நிமிடத்தில் சொன்னார், "வேலைய ஆரம்பிக்கலாம் பூமி நல்லாயிருக்கு, கட்டிடம் நிக்கும்"
3 நாள் கழித்து வந்த அந்த பொறியாளரும் மண் ஆய்வுகள் திருப்திகரமாக இருப்பதாகவும், தாரளமாக வேலையை தொடங்கலாம் என்று சொன்னார். இந்த முடிவை சொல்ல படிப்பறிவிற்கு 3 நாள் தேவைப்பட்டது ஆனால் பாரம்பரியத்துடன் கூடிய பட்டறிவிற்கு தேவைப்பட்டது 5 நிமிடங்கள் தான்.
பிறகு வேறு ஒரு தருணத்தில் அதற்கான உண்மையை அறிந்து கொண்டேன், அதாவது மண் குழிக்கு மேல் குவிந்து நிற்குமானால் கட்டுமானத்திற்கான இடம் அது. குழியில் வெட்டி எடுக்கப்பட்ட மண் நிரம்பாமல் போனால் அந்த இடத்தில் கட்டுமானம் கூடாது. இந்த சோதனையை நடத்தக் கட்டுமானப் பொறியியல் படிப்பொன்றும் தேவையில்லை. இந்த மண் ஆய்வை வீடு வாங்குபவர்களும் பெரிதாக கண்டு கொள்வதில்லை அந்த கட்டட நிறுவனமும் ஏதோ கடமைக்கு ஒரு ஆய்வு என்று அதன் உண்மையை மறைத்து நம் தலையில் கட்டிவிடுகிறார்கள்.
தமிழகம் முழுவதும்
பல தனியார் பொறியியல் கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குளம் மற்றும் ஏரிப் புறம்போக்கை ஆக்கிரமித்து எழுப்பப்பட்டு, அரசின் அனுமதியைப் பெற்றுக் கொண்டவைதான். விபத்து நேர்ந்தால் பலியாகப் போவது அப்பாவிகள்தான்.
பெருநகர வளர்ச்சிக் குழுமமும் சரி, நகர் ஊரமைப்பு இயக்ககமும் சரி, ஆவணங்களும், வரைபடமும் சரியாக இருப்பதால் அனுமதி வழங்குவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், கட்டுமான வல்லுனர்கள் குழுவை அமைத்து, எழுப்பப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள் மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவையா,
கட்டுமானத்தின் தரம் சரியாக இருக்கின்றதா போன்ற பரிசோதனையிலும் ஈடுபட வேண்டும். கட்டடங்களின் அடித்தளம் சரியாகவும், முறையாகவும் போடப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதும் இன்றியமையாதது.
இந்த விபத்தை தொடர்ந்து ஜூலை 4 ஆம் தேதி காலை சென்னை எழும்பூரில் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள சி.எம்.டி. ஏ. அலுவலகத்தில் சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளர் கார்த்திக் தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் 1 மணிநேரம் நடைபெற்றது.
அப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த அடுக்குமாடி கட்டிடங்கள், கட்டிக் கொண்டிருக்கும் அடுக்குமாடி கட்டிடங்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. திட்ட அனுமதி பெற்றதுபோல கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா? அல்லது விதிமுறை மீறப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
பின்னர் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் 60 பேர்கள் 19 குழுக்களாக பிரிந்து, ஒவ்வொரு குழுவும் தனித்தனியாக கார்களில் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் இருந்து நேற்று பகல் 12 மணி அளவில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இடம் பெற்றிருந்தனர். சில குழுவில் 3 பேர்களுக்கும் அதிகமாக மேல் இருந்தனர். அந்த குழுவினர் சென்னை பூந்தமல்லி, அண்ணாநகர், போயஸ்கார்டன், ஸ்டெர்லிங் ரோடு, பல்லாவரம்– குரோம்பேட்டை இடையே உள்ள ஜி.எஸ்.டி. சாலை உள்பட பல்வேறு இடங்களில் சி.எம்.டி.ஏ. அனுமதி பெற்று கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை ஆய்வு செய்துள்ளனர்.
இந்த ஆய்வுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, "ஆய்வு 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. கட்டிடம் கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ. அனுமதியில் குறிப்பிட்டது போல கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா என்பதை அளந்து பார்த்தோம். இது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலாளர் கார்த்திக்கிடம் அறிக்கை சமர்பிப்போம். நாங்கள் ஆய்வின்போது கட்டிடம் அளந்து பார்த்ததில் சி.எம்.டி.ஏ. விதிமுறை மீறப்பட்டு இருந்தால் எந்த கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதோ? அந்த கட்டிடத்திற்கு சி.எம்.டி.ஏ. சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்"
இவர்கள் ஆய்வு செய்தவைகளில் பெரும்பாலனவை கட்டி முடிந்த அல்லது முடியும் தருவாயில் உள்ள அடுக்கு மாடி கட்டிடங்கள் தான். இப்போது செய்கின்ற இந்த ஆய்வு எப்போது செய்யப்பட்டிருக்க வேண்டும்? இதுவும் ஒரு கண் துடைப்பு தான். நாமும் நம் அதிகாரிகளும் எப்போது தான் திருந்தப்போகிறோமோ.
- கும்பகோணத்தில் பச்சிளம் குழந்தைகளை தீய்க்கு கொடுத்து விட்டுத்தான் பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகள் பற்றிய சட்டம் நடைமுறை படுத்தப்பட்டது.
- பள்ளி வாகனத்தில் இருந்த பெரிய ஓட்டையில் விழுந்து குழந்தை இறந்த பிறகு தான் பள்ளி வாகனங்கலுக்கான ஒழுங்கு சட்டம் நடைமுறை படுத்தப்பட்டது.
- குமுளி தேக்கடியில் முறையாக பராமரிக்க படாததால் படகு விபத்து நடந்த பின்னர் தான் பாதுகாப்பு பற்றி உணர்ந்து அந்த துறையை நெறிபடுத்த ஆவன செய்யப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது.
- தமிழகத்தின் ஒரு பகுதியில் காலாவதியான உணவுப் பொருட்களை பயன்படுத்தி பலர் இறந்த பின்னர் தான் அதற்க்கான அதிகாரிகள் முறையான ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் முறை நடைமுறை படுத்தப்பட்டது.
- கடந்த 2 ஆண்டுகளாக மின் பற்றாக் குறையினால் தமிழகத்தில் பல தொழில்கள் நலிவடைந்து மக்களின் சராசரி வாழ்க்கை கேள்விக்குறியான பிறகு அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்து தற்போது அந்த நிலைமை சற்று மாறியுள்ளது.
- சிறுசேரியில் தகவல் தொழில் நுட்ப பொறியாளர் உமா இறந்த பிறகு தான் அதற்க்கான சட்ட சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு பெண் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பை அந்தந்த நிறுவனங்கள் ஏற்கும் முறை நடைமுறை படுத்தப்பட்டது.
- சில மாதங்களுக்கு முன் சென்னை ரயிலில் குண்டு வெடிப்பு நடந்து சம்பவத்திற்கு பிறகு தான் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு நெறிபடுத்தப்பட்டது.
மேலே கூறப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் தமிழகத்தில் நடந்தவைகளில் சில. இந்த நிகழ்வுகள் நடந்த பின்னர் எந்த சட்டமும் புதிதாக கொண்டு வரப்படவில்லை, ஏற்கனவே உள்ளவையே. இவைகளை முறையாகவும் கண்டிப்பாகவும் பின்பற்ற அரசு மறு ஆணை பிறப்பித்தது. இதிலிருந்து அறிவது விபத்து நடக்காவண்ணம் தடுக்க போடப்பட்ட எந்த சட்டங்களிலும் அந்த துறையை சார்ந்த அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை.
‘வருமுன் காப்போம்’ என்பது பாடப்புத்தகங்களிலும்
அரசு மருத்துவமனை சுவர்களிலும் அச்சிடப்பட்டு இருக்கிறதே தவிர எந்த அரசு அதிகாரியின் மனதிலும் அச்சிடப்படவில்லை.
வெயில் காலம் வந்த பிறகு தான் தண்ணீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பது, மழைக்காலம் ஆரம்பித்து முடியும் தருவாயில் தான் மழை நீர் சேகரிப்பு பற்றி நடவடிக்கை எடுப்பது, பருவ நிலை மாற்றங்களால் நோய் தொற்று ஏற்பட்டு சில உயிர்கள் போன பிறகு தான் அதை பற்றி சிந்தித்து நடவடிக்கை எடுப்பது, மேலே சொன்ன நிகழ்வுகள் ஏற்பட்டு பல உயிர்கள் போன பிறகு தான் அதற்கான நடவடிக்கை எடுப்பது இது தான் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து நமக்கு செய்து கொண்டிருக்கும் சேவை.
படிப்பறிவில்லாத காமராஜர் அவர்களால் தொலைநோக்கு பார்வையால் நாட்டிற்கு குறுகிய காலத்தில் இவ்வளவு செய்ய முடியும் என்றால், படித்த மேதாவிகளாக வலம் வரும் இன்றைய திராவிட கட்சிகளால் எவ்வளவு செய்ய முடியும் / செய்து முடித்து இருக்க வேண்டும்.
அது சரி! அவனவனுக்கு நாட்டை சுரண்டி தன் சொத்து மதிப்பையும் தான் சார்ந்த சமூகத்தார்களை (ஜாதி) வளர்ப்பதிலும் குறியாய் இருக்கும் போது நாட்டை பற்றி சிந்திக்க நேரம் எப்பிடி இருக்கும்.
அது சரி! அவனவனுக்கு நாட்டை சுரண்டி தன் சொத்து மதிப்பையும் தான் சார்ந்த சமூகத்தார்களை (ஜாதி) வளர்ப்பதிலும் குறியாய் இருக்கும் போது நாட்டை பற்றி சிந்திக்க நேரம் எப்பிடி இருக்கும்.
"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்" இது பி.எஸ்.வீரப்பா சொன்ன சினிமா வசனம் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
தவறு!
தவறு!
இது திராவிட கட்சிகள் தமிழகத்திற்கு விட்ட உண்மையான சாபம், அதனால் தான் இன்னும் அன்பவித்து கொண்டு இருக்கிறோம்.
வாழ்க தமிழகம்!