கும்பகோணம் பள்ளி தீ விபத்து ஏற்பட்டு 10ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்து 94 குழந்தைகளின் உயிரைப் பறித்தது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்து தொடர்பாக அந்த பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமி, அவரது மனைவி உள்ளிட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பில் கும்பகோணம் அமிர்தா நகரில் அமிர்தவிநாயகர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று உள்ளது. தீ விபத்து நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன்பு குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள், காயமடைந்த மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும் தமிழக அரசு சார்பில் கும்பகோணம் பாலக்கரையில் பள்ளி தீ விபத்தின் நினைவாக ரூ.66 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த தீ விபத்து தொடர்பான வழக்கு கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்டு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தீ விபத்து வழக்கை ஆறு மாத கால அவகாசத்திற்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. இருப்பினும் இந்த வழக்கு இன்னமும் முடிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத் தொகையும் இன்றுவரை கிடைத்த பாடில்லை.
இந்த விபத்துக்கு வருத்தம் தெரிவித்து அன்றைய அரசை விமர்சித்த ஒட்டுக் கட்சிகளை
இன்று காணோம். தன் பங்குக்கு வருத்தம் தெரிவித்தாகி விட்டது என்று அடுத்த வேலையை
பார்க்க சென்றுவிட்டனர். சம்பந்தபட்ட அதிகாரிகளும் தீர்ப்பு வரட்டும் என்று இருக்கிறார்கள்,
அதான் உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் இருக்கே . இதில் தீர்ப்பு வந்து அவர்கள் தண்டிக்கப்படுவதற்க்குள்
அந்த அதிகாரிகள் ஓய்வு பெற்று விடுவர் பணியிலிருந்தோ அல்லது இந்த உலகிலிருந்தோ. அப்புறம்
தீர்ப்பு வந்தா என்ன வராட்டி என்ன?
இந்த நாட்டில் வந்து பிறந்து விட்டோமே என்று எல்லோரும்
ஒவ்வொரு நாளும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தன் பிஞ்சு குழந்தைகளை தீக்கு
இரையாக்கி விட்டு இன்றும், என்றென்றும் அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களின் சோகம்
சொல்லொனாத் துயர் தான்.
அமெரிக்கா போன்ற நாட்டில் ஒன்றும் அறிய சிறுமொட்டுக்கள் கருகி இறக்க காரணமானவர்கள் இன்றும் தண்டிக்க படாமல் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் கிடைக்கப்பெறாமல் இருந்திருக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது.
அது இந்தியாவில் மட்டும் தான் முடியும். நாம் தான் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமே!
வெட்கக்கேடு!
வாழ்க ஜனநாயகம்!