நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

குமிழித்தூம்பு என்ற மதகு

தமிழரின் 2000 ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு. தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு  இதன் சிறப்பு. கிட்டத்தட்ட Venturi போன்று இது செயல்படுகிறது.

மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும்.கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும். அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும். தூர்வாரும் வேலை குறைந்துவிடும்..சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும்ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மதகுகள் கைவிடப்பட்டு பலகை வடிவ மதகுகள் அமைக்கப்பட்டது குளத்தில் மண் தங்கிவிட காரணமானது

-முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் ரொத்திரம் இதழில் (ஜீலை 2014) எழுதியுள்ள கட்டுரையில் இருந்து...

மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்தநாள் - ஜூலை 25


கங்கை கொண்ட சோழன், கடாரம் வென்றான் என்ற மெய்க்கீர்த்திக்கு சொந்தக்காரரான ராஜேந்திர சோழன் மாமன்னராக முடிசூடிக்கொண்ட ஆயிரமாவது ஆண்டு விழா அவரது பிறந்தநாள்  இன்று.

ராஜேந்திர சோழன் மாமன்னர் ராஜராஜனுக்கும், அவரது மனைவி வானவன்மாதேவிக்கும் ஆடி மாதத்து ஆதிரை நாளில் திருமகனாக பிறந்தவர். மதுராந்தகன் என்பது இவரது இயற்பெயராகும்.

கி.பி.1012–ல் ராஜராஜ சோழனால் இளவரசராக நியமிக்கப்பட்டார். கி.பி.1014–ல் தன் தந்தையின் மரணத்திற்கு பின்பு சோழப்பேரரசராக ராஜேந்திர சோழன் என்னும் திருநாமத்தோடு அரியணையில் அமர்ந்தார். அவர் மாமன்னராக முடிசூடிக்கொண்ட ஆயிரமாவது ஆண்டு விழா அவரது பிறந்தநாளான இன்று கொண்டாடப்படுகிறது.

கி.பி.1044 வரை முப்பதாண்டு காலம் பரந்துப்பட்ட சோழப்பேரரசின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார். இந்திய வரலாற்றில் வீரத்தில் இவருக்கு நிகராக மற்றொரு அரசனை கூற முடியாது.  தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பதை தனது புஜ, பல பராக்கிரமத்தால் நிரூபித்துக்காட்டிய மாவீரன் ராஜேந்திர சோழன்.

இவரது தந்தையார் சோழ சாம்ராஜ்ஜியத்தின் தன்னிகரற்ற மன்னர் ராஜராஜ சோழன். தமிழரின் கட்டிடக்கலையின் சிறப்பை உலகெங்கும் பறை சாற்றும் தஞ்சைப் பெரிய கோவிலைக்கட்டி அதன்மூலம் சிரஞ்சீவி புகழைப் பெற்றவர். ராஜேந்திர சோழன், தந்தை கட்டிய பெரிய கோயில் போலவே பிரகதீஸ்வரர் கோயிலை கங்கை கொண்ட சோழபுரத்தில் ஏற்படுத்தினார். இக்கோயில் தற்போது யுனெஸ்கோ உலக மரபுச் சின்னமாக பாதுகாக்கப்படுகிறது.

ராஜராஜ சோழனின் வல்லமையை, தமிழ்ப்பற்றை, நிர்வாகத்திறனை நாடறியும். ஆனால் அவரது மைந்தர் ராஜேந்திர சோழனின் நதிமூலம், ரிஷிமூலம், செயலாற்றல், வீரத்தின் வெளிப்பாடு பெரும்பாலும் வெளி உலகிற்கு தெரியாமல் வரலாற்று செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் சிறைபிடிக்கப்பட்டு விட்டன.

பூர்வதேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட கோப்பரகேசரிவர்மன் என்று கல்வெட்டுக்கள் புகழ்ந்து கூறும் பெருமைக் குரியவர் ராஜேந்திர சோழன். விஜயலாய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப்பேரரசு, ராஜேந்திரன் காலத்தில் தான் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் ஒப்பாரும், மிக்காரும் இல்லை என்ற சிறப்பைப் பெற்றவர் ராஜேந்திர சோழன்.

வரலாற்று சிறப்பு மிக்க ராஜேந்திர சோழன் பேரரசராக முடிசூட்டப்பட்ட, 1,000வது ஆண்டு இது. 1985ம் ஆண்டில், ராஜராஜ சோழன் முடிசூடிய, 1,000வது ஆண்டு விழாவை, அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., பிரதமராக இருந்த இந்திரா காந்தி முன்னிலையில், தஞ்சாவூர் பெரிய கோவிலில் அரசு விழாவாக கொண்டாடினார் என்பது குறிப்பிடப்படத் தகுந்தது.

கங்கை கொண்ட சோழபுரம் பற்றி பிரபல வரலாற்று அறிஞரும், கல்வெட்டு ஆராய்ச்சி- யாளருமான  முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறியது,

 "விஜயாலய சோழன் காலத்தில் இருந்து ராஜராஜன் காலம் முடியும் வரை தஞ்சை தலைநகரமாக இருந்தது. ராஜேந்திர சோழன் முதல் 10 ஆண்டுகள் மட்டுமே தஞ்சையில் இருந்தார். பின்பு கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைநகரை மாற்றினார்

இந்திய திருநாட்டிலும், கடல் கடந்த கீழ்த்திசை நாடுகளிலும் எண்ணற்ற வெற்றிகளை குவித்தவர் ராஜேந்திர சோழன். ஒவ்வொரு முறையும் பல்லாயிரக்கணக்கான யானைகளும், குதிரைகளும், தேர்களும், காலாட்படையும் ஆறுகளும், வயல்களும் மிகுந்த மருதநில பகுதியான தஞ்சையில் இருந்து புறப்பட்டு வடபுலம் செல்ல, காவிரியின் அத்தனை கிளை நதிகளையும் கடக்க வேண்டும். சாலைகள் பழுதடையும். பசுமையான விளைநிலங்கள் பாழ்படும். இதை அனுபவபூர்வமாக உணர்ந்த ராஜேந்திரன் தான் விரும்பிய ஒரு புது தலைநகரத்தை கொள்ளிடத்திற்கு வடக்கே நிறுவ விரும்பினார். அதனால் உருவானதே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் கங்காபுரியாகும்.

தற்போதைய வங்கதேசம், மேற்கு வங்காளம் ஆகியவற்றை அப்போது பாலர் என்னும் அரச மரபினர் ஆட்சி செய்தனர். வடபுலம் நோக்கி படை எடுத்துச்சென்ற ராஜேந்திர சோழனின் பெரும்படை கங்கை பேராற்றைக் கடந்து பல நாடுகளை வென்று இறுதியாக பாலர்களின் வங்க தேசத்தையும் கைப்பற்றி வெற்றிவாகை சூடியது. பின்னர் அங்கிருந்து திரும்பும் போது கங்கை நீரை குடங்களில் சுமந்து வந்தனர். வெற்றிச் செய்தி அறிந்த ராஜேந்திர சோழன் கோதாவரி ஆற்றங்கரை வரை சென்று கங்கை நீருடன் திரும்பும் தன் பெரும் படையை எதிர் கொண்டு அழைத்து அப்புனித நீரால் தான் தோற்றுவித்த புதிய நகரின் மணி மகுடமாக திகழ்ந்த சிவலாயத்திற்கு கடவுள் மங்கலம் (நன்னீராட்டு) செய்தார்.

மேலும் அந்நகரின் குடிநீர் தேவைக்காக புதிதாக ஏரியை தோற்றுவித்து அதில் அப்புனித நீரை ஊற்றி சோழ கங்கம் என அதற்கு பெயரும் இட்டார். கங்கை கொண்ட சோழன் என்று பட்டம் புனைந்து கொண்டதோடு புதிய நகரத்திற்கு கங்கைகொண்ட சோழபுரம் என்றும், அங்கு அவர் எடுத்த பெருங்கோவிலுக்கு கங்கைகொண்ட சோழிச்சரம் என்றும் அதன் மூலவருக்கு கங்கைகொண்ட சோழிச்சரமுடைய பரமசாமி என்றும் பெயர்களைச் சூட்டி வரலாற்றில் என்றும் நிலைப்பெறச்செய்தார்.

சிவபாத சேகரன் என தன்னை கூறி கொண்ட ராஜராஜ சோழனின் மாட்சிமையை எவ்வாறு தஞ்சை ராஜராஜேச்சரம் என்னும் பெரியகோவில் காட்டி நிற்கின்றதோ அது போன்றே சிவசரணசேகரன் என்று தன்னை குறிப்பிட்டுக்கொண்ட ராஜேந்திர சோழனின் அருஞ் சாதனைகளை கங்கை கொண்ட சோழிச்சரம், சந்திரன், சூரியன் உள்ளளவும் காட்டி நிற்கும்.

தஞ்சையில் பிறந்து, கங்கை கொண்ட சோழபுரத்தில் வாழ்ந்து கடல் கடந்த வெற்றிகளை தழுவி, இந்திய வரலாற்றில் தனியிடம் பெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழன் கி.பி.1044–ம் ஆண்டில் வட ஆற்காடு மாவட்டம் பிரம்ம தேசம் என்னும் ஊரில் தங்கியிருந்த போது மரணம் அடைந்தார்.

இதனை பிரம்மதேசம் கல்வெட்டு கூறுகிறது"