நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

கோல்கேட்டின் திருட்டுத்தனம்

இன்று காலை அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு இந்த மாதத்திற்க்கான மளிகை பொருட்கள் வாங்க என் மனைவியுடன் சென்றேன். பல்  துலக்கும் பிரஷ்ஷை எடுக்க சென்ற இடத்தில் நான் கண்ட கோல்கேட் நிறுவன பிரஷ்ஷால் ஒரு நிமிடம் டென்ஷன் உடன் கோபமும் வந்து விட்டது.

கோல்கேட் நிறுவனம் புதிதாக கறுப்புநிறக் குச்சங்கள் கொண்ட பல்துலக்கும் பிரஷ்ஷை அறிமுகப்படுத்தியிருகிறது. அதில் கரித்தூள் (charcoal) இருக்கும் என்றும் அதனால் வெள்ளைக்குச்சங்கள்  கொண்ட பிரஷ்ஷைவிட இது நன்றாக ஊடுருவி பற்களைத் துலக்கும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது
கறுப்புநிறக் குச்சங்கள் கொண்ட பிரஷ்
இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டு, டிவியில் நடிகை காஜல் அகர்வால் தோன்றி "உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?" என்ற விசாரிப்போடு வரும் கோல்கேட் உப்பு (salt) பேஸ்ட்டும் சந்தையில் விற்பனையாகி வருகிறது.



இதை அசை போடும்போது என் நினைவில் 30 ஆண்டுகளுக்கு முன் திரையரங்குகளில் ஒளிபறப்பு செய்யப்பட்ட இதே கோல்கேட் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று ஓடி மறைந்தது. அதாவது திரையரங்கிள் படம் போடுவதற்கு முன்னும் இடைவேளை முடிந்து படம் ஆரம்பிப்பதற்கும் முன்னும் வரும்  விளம்பரத்தில்ஒரு பயில்வான் வந்து அதிக எடையைத் தூக்கி பலத்த கைதட்டலுடன் பரிசு வாங்குவார்அவ்வளவு எடையைத் தூக்கிய அந்த பயில்வான் ஒரு சாதாரண சோளக்கதிரைக் கடிக்கும்போது பல்வலியால் துடிப்பார். அதிலிருந்து மீள்வதற்கு, கரித்தூளும் உப்பும் கலந்த கலவையால் பல்துலக்கத் தயாராவார் பயில்வான்

அப்போது ஒரு குரல் ஒலிக்கும், “உடம்புக்கு பாலும் பாதாமும். பல்துலக்க உப்பும் கரித்தூளுமா?” எனக் கேட்டு, "உப்பும் கரித்தூளும் வேஸ்ட். கோல்கேட் டூத்பவுடரும் டூத்பேஸ்ட்டும் சிறந்தவை என்றும் நல்ல பலன்தரக்கூடியவை" என்று கோல்கேட் டூத்பவுடரை பயன்படுத்தும்படி அந்தக் குரல் பரிந்துரைக்கும்.

இப்படி  விளம்பரம் செய்து, சந்தையை ஆக்கிரமித்து, வியாபாரத்தைப் பெருக்கிய அதே கோல்கேட் நிறுவனம்தான், உப்பு பேஸ்ட்டையும் கரித்தூள் பிரஷ்ஷையும் இப்போது வியாபார நோக்கத்துடன் விளம்பரம் செய்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் உப்பையும் கரித்தூளையும் தவிர்க்கச் சொன்ன கோல்கேட், இப்போது அந்த இரண்டையும் வைத்து பல் துலக்கச் சொல்கிறது. இதைத்தானே அந்த பயில்வானும் செய்தார்.

என்ன ஒரு திருட்டுத்தனம்.