நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

காந்திய வழியில் அம்மாவின் ஆட்சி

இன்று சென்னையில் உள்ள கல்வித்துறை அதிகாரி அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா அக்டோபர் 2-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைத்து  
பள்ளிகளும், 8 மற்றும் 9-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கும் 'காந்திய வழியில் அம்மாவின் ஆட்சி' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தவேண்டுமாம். 

கடந்த மாதத்தின் இறுதியில் இதே போன்ற சுற்றறிக்கை அனைத்து கல்லூரிகளுக்கும்
கல்வித்துறை அதிகாரி திருமதி.வீ.காந்திமதி மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது



இந்த அம்மாவின் துதிபாடிகளின் அடிமை தனத்திற்கு அளவே இல்லை. காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி அவரது அரும் பணிகளையும் தியாகங்களையும் மாணவர் மத்தியில் நினைவு கூறும் வகையில் போட்டிகள் நடத்தப்படுவது வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால் சிறப்புக்களை கூறும் விதத்தில் அவர் சார்ந்த தலைப்புகளில் போட்டிகள் நடத்துவதை தவிர்த்து தமிழக முதல்வரின் புகழ் பாடும் வகையில் 'காந்திய வழியில் அம்மாவின் ஆட்சி' என்று தலைப்பை தேர்ந்தெடுத்து, அதை அரசு சுற்றறிக்கையாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பது ஏற்புடையதல்ல. 

இந்த கேடுகெட்ட ஜென்மங்கள் அவர்களின் அரசியலை படிக்கும் மாணவர்கள் மத்தியில் திணிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ஏர் நடந்தால் பார் நடக்கும் என்பது ஒளவையின் முதுமொழி, ஆனால் டாஸ்மாக் பார் வருவாயில் தான் தமிழக அரசே நடக்கிறது இன்று. தெருவெங்கும் மதுக்கடைகளை திறந்து வைத்து, தமிழக இளைஞர்களை சீரழித்து, பல குடும்பங்களை நாசமாக்கி கொண்டிருக்கும் அம்மாவை காந்தியுடன் ஒப்பிட்டு, அவர் வழியில் தமிழகம் திளைத்ததாக மாணவர்களை நம்பவைக்க கல்வித்துறையும் சேர்ந்து கொண்டுள்ளது. அது சரி இன்றைய மாணவர்கள் தானே நாளைய ஓட்டு வங்கிகள், அதான் அட்வான்ஸ் புக்கின் ல் இப்படியொரு கொடுமை. அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் இவற்றின் வரிசையில் அம்மா மதுபானக்கடையையும் அறிமுகம் செய்யலாமே, அதில் மட்டும் ஏன் தயக்கம் காந்திய வழியில் அம்மாவின் ஆட்சி இன்னும் சீரும் சிறப்புமாக இருக்கும்.

வாழ்க ஜனநாயகம்!