நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

ஜவாஹர்லால் நேரு-இந்தியாவின் முதல் பிரதமர்

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவாஹர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலின்போது கடைப்பிடித்த ஜனநாயகப் பண்பை நினைவுகூரத் தோன்றுகிறது.

1952
பொதுத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ரேவா சட்டப்பேரவைத் தொகுதியில் ரேவா ஜமீன்தார் ராவ் சிவ் பகதூர் சிங், காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் பின்னாளில் காங்கிரஸின் செயல் தலைவராக இருந்தவரும், ஆளுநர், மத்திய அமைச்சர் போன்ற பதவிகளை வகித்தவருமான அர்ஜுன் சிங்கின் தந்தை. 

ரேவா தொகுதிக்கு பிரசாரத்திற்கு வரும்வழியில், அந்தத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ராவ் சிவ் பகதூர் மீது பல கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ள விவரம் பிரதமர் நேருவுக்குத் தெரிவிக்கப்பட்டது. பிரசாரத்திற்கு மேடை ஏறிய பண்டித நேரு ரத்தினச் சுருக்கமாகக் கூறிய வார்த்தைகள் இவைதான்,
 
"
ஜனநாயகம் என்கிற அற்புதமான ஆட்சிமுறையை நாம் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதன் மூலம் படித்தவர்-பாமரர், ஏழை-பணக்காரன், உயர்ந்த ஜாதி-தாழ்ந்த ஜாதி என்கிற எந்தவிதப் பாரபட்சமும் இல்லாமல் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. உங்களது வாக்குரிமையை பயன்படுத்தி நல்லவர்களை நீங்கள் தேர்ந்தெடுத்தால் மட்டுமே நீங்கள் அடைந்திருக்கும் மக்களாட்சி காப்பாற்றப்படும். எனக்கு காங்கிரஸ் முக்கியம். அதைவிட முக்கியம் இந்தியாவின் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு வேரூன்றுவது. அதனால், குற்றப் பின்னணி உள்ள எங்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு தயவுசெய்து வாக்களித்து விடாதீர்கள்!' இப்படிக் கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கிச் சென்றுவிட்டார்.