நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

ஒழுக்கசீலர்கள் கோடீஸ்வர ஏழைகள்



வெற்றிகரமாக 16வது லோக்சபாவிற்கான தேர்தல் முடிந்து புதிய எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். திரு.நரேந்திர மோடி புதிய பிரதமராக நாளை பதவியேற்கிறார். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை முன்னேற்றுவதாக சொல்லி சொல்லி தங்கள் பெயரிலும் , தங்களின் பினாமி பெயரிலும் சொத்துக்களை முன்னேற்றியவர்கள் தான் நம் எம்.பி க்கள். நாடும், நாட்டு மக்களும் அப்படியேதான் இருக்கிறார்கள். நாமும் வழக்கம் போல் ஓட்டு போட்டு நம்மையும் நாட்டையும் இந்த ஒழுக்க சீலர்களிடம் ( எம்.பிக்கள்) ஒப்படைத்துவிட்டு நம்முடைய ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டதாக அடுத்த வேலையை பார்க்க போய்விடுகிறோம்.


தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒழுக்க சீலர்களான இந்த எம்.பிக்களில் மூன்றில் ஒருவர் குற்றப்பின்னணி உடையவர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவில் இணைக்கப்பட்டுள்ள வேட்பு மனுத்தாக்கலில் குறிப்பிட்டிருந்த தகவல்களை வைத்து ஆய்வு செய்யப்பட்டதில் இது தெரியவந்துள்ளது. வேட்புமனுவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எல்லாம் வேட்பாளர்களே உண்மை  என்று ஒத்துக்கொண்டு குறிப்பிடப்பட்டவையே.

நேஷனல் எலக்ஷன் வாட்ச் (நியூ) மற்றும் ஜனநாயக சீர்த்திருத்த கூட்டமைப்பு (.டி.ஆர்), மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 543 வேட்பாளர்களில் 541 வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆய்வு நடத்தியதுஅதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 186 எம்.பிக்கள் அதாவது 34 சதவீத எம்.பிக்கள் தங்களது வேட்பு மனுத்தாக்கலில் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த 186 புதிய எம்.பிக்களில் 112 பேர் கொலை, கொலை முயற்சி, மதநல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்தல், கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக மிக தீவிரமான கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி வாரியாக பார்க்கும்போது, அதிகபட்சமாக பா...வின் வெற்றி பெற்ற 281 வேட்பாளர்களில் 98 பேர் கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியின் 44 வேட்பாளர்களில் 8 பேரும், சிவசேனாவின் 18 வேட்பாளர்களில் 15 பேரும், திரிணாமுல் காங்கிரசின் 34 வேட்பாளர்களில் 7 பேரும் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தேர்தல் வேட்புமனுவில்  தெரிவித்துள்ளனர். 2009-ல் இது 30 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல 82 சதவிகித எம்.பிக்கள் கோடீஸ்வரர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. 2009ம் ஆண்டு 58 சதவிகித எம்.பிக்களும், 2004ம் ஆண்டு 30 சதவிகித எம்.பிக்களும்தான் கோடீஸ்வரர்களாக இருந்தனர். பத்தாண்டுகளில் கோடீஸ்வர எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி, தெலுங்கானாராஷ்டிரிய சமீதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள்தான் சராசரியாக 50 கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. குண்டூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி ஜெயதேவ் 683 கோடிக்கு சொந்தக்காரராம்.

மேலும் தமிழக வேட்பாளர்களில் பலரும் கோடீஸ்வரர்களே, ஏகப்பட்ட அசையும், அசையா சொத்துக்களுடன் முக்கியமானவராக கருதப்படுபவர்.

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரன் (ரூ. 93 கோ கோடி) அவரின் பெயரில் ரூ. 46.04 கோடி அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. அவரது மனைவி பெயரில் ரூ. 36.46 கோடி சொத்தும், மகன் பெயரில் ரூ 9.45 கோடி சொத்தும், இன்னொரு மகன் பெயரில் ரூ. 90.83 லட்சம் சொத்தும், மருமகள் பெயரில், 79.31 லட்சம் ரூபாய் என, மொத்தம் 93.67 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக, வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அதிமுக வேட்பாளர் பரசுராமனிடம், அவரது பெயரில், 8.37 கோடி ரூபாய், மனைவி பெயரில், 3.27 கோடி ரூபாய், குழந்தைகள் பெயரில், 4.70 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், பாஜக, அதிமுக, ஆம்,ஆத்மி கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் கோடீஸ்வரர்களாக உள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் லட்சாதிபதிகளாகத்தான் இருக்கின்றனராம்.

கடந்த நவம்பர் 2013 ல் ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில், ராஜ்யசபாவில் 17% எம்.பிக்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 67% எம்.பிக்கள் கோடீஸ்வரர்கள்  என்று  தெரியவந்துள்ளது.

ராஜ்யசபாவில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் சபையில் நிரப்பப்படாத இடங்களை தவிர்த்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 38 பேர் கிரிமினஸ் வழக்குகளை எதிர்க்கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதில் 15 பேர் மிகவும் ஆபத்தான கிரிமினல் வழக்குகளை எதிர்க்கொண்டுள்ளனர்.  227 உறுப்பினர்களை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. எஸ்.பி.எஸ். பாகலுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு உள்ளது. டெல்லி காங்கிரஸ் எம்.பி. பர்வேஸ் ஹாஷ்மிக்கு எதிராக கொடூரமான தாக்குதல் நடத்திய வழக்கு உள்ளது.

கோடீஸ்வர எம்.பி. பட்டியலில் பீகார் மாநிலம் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மகேந்திர பிரசாத் ரூ. 683.56 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்துள்ளார். இரண்டாவதாக ரூ. 615.42 கோடி சொத்துடன் சுயட்சை உறுப்பினரான கர்நாடகாவை சேர்ந்த விஜய் மல்லையாவும், அவரை அடுத்து உத்தரபிதேச மாநிலம் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ஜெயா பச்சன் 493.86 கோடி சொத்துடன் மூன்றாவது இடத்திலும்  இருந்துள்ளனர்.

9
எம்.பி.க்களின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 20 லட்சத்திற்கு குறைவாக உள்ளது. மிகவும் குறைவான சொத்து கொண்டவர்கள் பட்டியலில் மத்திய பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி எம்.பி. அனில் தேவ் ரூ. 2.75 லட்சத்துடன் முதலிடத்திலும்இவரை அடுத்து மேற்கு வங்காள மாநிலம் திரிணாமுல் காங்கிராஸ் கட்சியை சேர்ந்த முகமத் நாதிமுல் ரூ. 3.19 லட்சத்துடன் இரண்டாவது இடத்திலும், அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மேற்கு வங்க எம்.பி. ரூ. 5.47 லட்சத்துடன் மூன்றாவது பட்டியலில் இருந்துள்ளனர்.

கடந்த ஜூலை 2013ல்  இதே ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் அப்போதைய  லோக்சபா எம்.பிக்களில் 162 பேர் அதாவது 30% பேர் கிரிமினல் வழக்குகளை சுமப்பவர்கள் என்று தெரியவந்தது.

ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை கடந்த 10 ஆண்டுகால வேட்பாளர்கள் (ஜூன் 2013 முடிய), எம்.பி, எம்.எல்.ஏக்களின் சரித்திரப் பக்கங்களை அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை வைத்து ஆய்வு செய்தது. இதனடிப்படையில் அந்த அமைப்புகள் ஒரு  ஆய்வறிக்கையை வெளியிட்டன.

அதில் அப்போதைய லோக்சபா எம்.பிக்களில் 30% பேர், ராஜ்யசபா எம்.பிக்களில் 17% பேர் கிரிமினல் வழக்குகளை தோளில் சுமப்பவர்கள் என்று தெரியவந்தது. அத்துடன் சிவசேனா கட்சியால் கடந்த 10 ஆண்டுகளில் (ஜூன் 2013 முடிய) தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏக்களில் 75% மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

அந்த ஆய்வு அறிக்கையின் முடிவுகள் பற்றிய ஒரு பார்வை...

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகாலத்தில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா தேர்தலுக்குப் போட்டியிட்ட 62,847 வேட்பாளர்கள் தாக்கல் செய்த விவரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

2004
ஆம் ஆண்டு முதல் சட்டசபை அல்லது லோக்சபாவில் இடம்பெற்றிருந்த 8790 பேரின் பின்னணி ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. போட்டியிட்ட 62,847 வேட்பாளர்களில் 11,063 பேர் கிரிமினல்கள் (18%). அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த 11,063 பேரில் 5253 பேர் மீது கடும் தண்டனை விதிக்கக் கூடிய வகையிலான சீரியஸ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன

நடப்பு லோக்சபாவில் மொத்தம் 543 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் 162 பேர் (30%) மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 76 பேர் (14%) மீது கடும் தண்டனைக்குரிய குற்றங்கள் பதிவாகி இருக்கின்றன. நடப்பு ராஜ்யசபாவில் 232 எம்.பிக்களில் 40 பேர் (17%) மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவர்களில் 16 பேர் மீது ( 7%) கடும் தண்டனைக்குரிய குற்றங்கள் பதிவாகியுள்ளன.

மாநிலங்களில் உள்ள 4032 எம்.எல்.ஏக்களில் 1258 பேர் (31%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் 15% பேர் மீது கடும் தண்டனைக்குரிய குற்றங்கள் நிலுவையில் இருக்கின்றன.

2004
ஆம் ஆண்டு முதல் 8790 எம்.பி/எம்.எல்.ஏக்களின் விவரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில் 2575 பேர் (29%) மீது கிரிமினல் வழக்குகள் இருந்துள்ளன. இவர்களில் 1187 பேர் (14%) மீது சீரியஸ் கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருந்தன.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் சிவசேனாவின் எம்.பி/எம்.எல்.ஏக்களில் 75% மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 137 எம்.பிக்கள், 103 எம்.எல்.ஏக்கள் அடக்கம்இந்த 'பெருமைமிகு' பட்டியலில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. அக்கட்சியின் 46% எம்.பி, எம்.எல்.ஏக்களும் ஐக்கிய ஜனதா தளத்தின் 44% எம்.பி,எம்.எல்.ஏக்களும் கிரிமினல் வழக்குகளை சுமப்பவர்கள்.

2004
ஆம் ஆண்டு பாரதிய ஜனதாவால் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களில் 31%, காங்கிரஸால் நிறுத்தப்பட்ட வென்றோரில் 22% பேர் கிரிமினல் வழக்குகளை தோளில் தாங்கியவர்கள்.




பலே! இப்பேற்பட்ட ஒழுக்க சீலர்களிடம் தான் நாம் நம் நாட்டை கொடுத்திருக்கிறோம், இந்தியாவை முன்னேற்ற அல்ல இந்த ஏழைகள் தங்கள் சொத்துக்களை முன்னேற்ற...

நேஷனல் எலக்ஷன் வாட்ச் (நியூ) மற்றும் ஜனநாயக சீர்த்திருத்த கூட்டமைப்பு (.டி.ஆர்) வெளியிட்ட ஆய்வறிக்கை முடிவுகள் அறிய இங்கே சொடுக்கவும்

தற்போது பிரதமராக தேர்ந்தெடுக்க பட்டவரும், முன்னால் குஜராத் மாநிலத்தின் முதல்வருமான நரேந்திரமோடியின், கடந்த நவம்பர் 2012ல் அப்போதைய சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 182 எம்.எல்.ஏக்களில் 134 பேர் கோடீஸ்வரர்கள், எம்.எல்.ஏக்களில் 57 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன.


வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து ஆவணக் கணக்குகளை வைத்து இந்த விவரங்களை கூறிய குஜராத் எலக்ஷன் வாட்ச் அமைப்பின் பேராசிரியர் ஜெகதீப் சோக்கர் பின்வருமாறு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

மொத்தம் உள்ள 182 எம்.பிக்களில் 57 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது மொத்த உறுப்பினர்களில் 31 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் 24 பேர் மீது கொலை, கற்பழிப்பு, கொலை முயற்சி என தீவிரமான வழக்குகள் உள்ளன. பாஜகவின் அமீத் ஷா, சங்கர் செளத்ரி, ஜேத்தா பர்வத், ஐக்கிய ஜனதாதளத்தின் சோட்டுபாய் வாசவா, காங்கிரஸின் ஜாசுபாய் பர்வத் ஆகியோர் மீது மிகவும் தீவிரமான வழக்குகள் உள்ளன.

வாசவா மீது கொள்ளை, கொலை, கொலை முயற்சி என 15 வழக்குகள் உள்ளன. அமீத் ஷா மீது சோராபுதீன், அவரது மனைவி கெளசர் பீ, துள்சிராம் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டரில் கொன்றதாக வழக்கு உள்ளது. பர்வத் மீது கற்பழிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு இவர் முன்பு போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்தபோது 1998ம் ஆண்டு தொடரப்பட்டதாகும். பின்னர் இவர் அரசியலுக்கு வந்த பிறகு வழக்கு கிடப்பில் போடப்பட்டு விட்டது.

கடந்த சட்டசபையில் 26 சதவீத கிரிமினல் வழக்குகளைக் கொண்டவர்களே உறுப்பினர்களாக இருந்தனர். இந்த முறை இது 31 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்தம் உள்ள 182 உறுப்பினர்களில் 134 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். இதில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் 86 பேர் ஆவர். காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் 43 பேர். ஒவ்வொரு பாஜக எம்.எல்.ஏவின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 5.82 கோடியாகும். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பொறுத்தவரை அவர்களது சராசரி சொத்து மதிப்பு ரூ. 12.36 கோடியாக உள்ளது.

ஒரு சாமானியனின் தேவையும், பிரச்சினைகளும் அவனை போன்ற ஒரு சாமானியனுக்குத்தான் தெரியும். ஆனால் இந்த ஒழுக்கசீலர்கள், கோடீஸ்வர ஏழைகளுக்கு எப்படி தெரியும், ஒரு சாமானியனின் தேவையும் பிரச்சினைகளும்.
இந்த கோடீஸ்வரர்களின் அவையில் ஒரு சாமானியனின், அடித்தட்டு வர்கத்தினரின், அன்றாடம் கஞ்சிக்கு வழியில்லாமல் தெருவோரம் தஞ்சமடைந்திதிருக்கும் ஏழைகளின் பிரச்சினைகள் எப்படி முன்னுரிமை பெறும்? தாகத்திற்கு 'கோக்' குடிப்பபவர்கள், பசிக்கு 'கேப்பை கூழ்' குடிக்கும் ஏழைகளின் பிரச்சினைகள் பற்றி எப்படி கவலைபடுவார்கள்? இந்த மேல்தட்டு மக்கள்  பின்தங்கிய சாமானியர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் எப்படி உயர்த்துவார்கள்? இந்த கிரிமினல்களிடம் அவர்களின் தவறுகளை சுட்டிகாட்டி தடுக்க ஒரு சாமானியனால்  முடியுமா?

கிரிமினல் பணபலத்துடன் வலியவனாக மேலும் வலியவனாகிறான். ஜனநாயகம் மக்களாட்சி என்று புலம்பும் எளியவன் வழக்கம் போல் ஏமாற்றப் படுகிறான்.