நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

உறைந்துகிடக்கிறது தமிழக அரசு

இன்றைய தமிழகத்தின் ஆளும் கட்சியின் நிலைமை குறித்து ஆனந்த விகடன் தலையங்கம்(23-Apr-2015)

விலகினால்... விலக்கப்படுவீர்கள் !

உறைந்துகிடக்கிறது தமிழக அரசு. ஆட்சி நிர்வாகத்தின் அத்தனை துறைகளிலும் சுணக்கம். அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள், எங்கே செல்கிறார்கள் என அதிகாரிகளுக்குக்கூடத் தெரியவில்லை. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கும், அதன் தீர்ப்பும்தான் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் ஒரே பிரச்னை என்பதைப்போல இருக்கின்றன தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள். சத்துணவு ஊழியர்களின் போராட்டம், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம், பார்வையற்ற பட்டதாரிகளின் உண்ணாவிரதம என எல்லா திசைகளிலும் போராட்ட அறிவிப்புகளும், கோரிக்கைக் குரல்களும் ஒலிக்கின்றன. கேட்பதற்குத்தான் செவிகள் இல்லை.

ஜெயலலிதா வந்துதான் தொடங்கிவைக்க வேண்டும் என்பதற்காக, முடிக்கப்பட்ட பல அரசுத் திட்டங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. மேம்பாலங்கள், கட்டடங்கள், மின் உற்பத்தித் திட்டங்கள்... என அனைத்துத் துறைகளும் அடக்கம். ஆனால், அமைச்சர்களோ, கோயில் கோயிலாகச் சென்று அங்கப்பிரதட்சிணம் செய்கிறார்கள்.அக்கினிச் சட்டி தூக்குகிறர்கள். பால்குடம், பன்னீர்குடம், பறவைக்காவடி, யாகங்கள் என அம்மா பக்தியில் மட்டுமே திளைக்கிறர்கள்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியில், கர்நாடகம் அதிவேகமாகச் செல்கிறது. செம்மரக் கடத்தலின் பெயரால் ஆந்திராவில் 20 தமிழர்களைச் சுட்டுக் கொன்று, 104 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். 1,500 பேர் ஆந்திரா சிறைகளில் அடைக்கபட்டுள்ளனர். தமிழ்hநட்டின் வாழ்வாதாரம் தொடர்புடைய சட்டப் போராட்டங்களைப் புறந்தள்ளும் தமிழக அமைச்சரவை, சொத்துக் குவிப்பு வழக்கில் மட்டுமே தனது மொத்த கவனத்தையும் செலுத்தி வருகிறது.

தலைமைச் செயலகம் முதல் கடைநிலை கிராமப் பஞ்சாயத்து வரை 'முதலமைச்சர்' என்ற இடத்தில் ஜெயலலிதாவின் புகைப்படமே இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. திரை அரங்குகளில் ஒளிப்பரப்படும் அரசின் விளம்பப் படங்களில் 'மக்களின் முதல்வர்' என்ற பாவனை கூட இல்லை. நேரடியாக 'முதல்வர் ஜெயலலிதா' என்றே சொல்கின்றனர். இது ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்கும் அசிங்கம். கோடிக் கணக்கான ஏழைகள் வாழும் நாடு இது. அரசின் திட்டங்களை நம்பி, பசித்த வயிறுகள் காத்திருக்கின்றன. அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் ஏறி இறங்குகின்றனர். தன்னில் இருந்து விலகிச் செல்லும் அரசாங்கத்தை, மக்கள் நிரந்தரமாக விலக்கி வைத்துவிடுவார்கள்.

அடுத்த தேர்தல் வரப்போவது தெரியும் தானே !