நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

கம்பம் உருவான கதை



தேனி மாவட்டத்தில் பழமையான நகரங்களில் கம்பமும் ஒன்று.

சிலப்பதிகாரத்தில் மதுரையை எரித்த கண்ணகி வைகைக் கரை வழியே மேற்கு நோக்கி நடந்து கம்பம் அருகேயுள்ள பத்தினிக்கோட்டையில் விண்ணேறினாள் என்பது வரலாறு.
கம்ப நாயக்கன், உத்தம நாயக்கன் என்ற இரு அரசர்கள் ஆட்சி செய்த பகுதி என்பதால் கம்பம் என்றும் உத்தமபுரம் என்றும் பெயர்  வந்ததாக கூறப்படுகிறது.

கம்பம் நகராட்சி, கம்பம், உத்தமபுரம் என்ற இரு கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்ட சம்பணர், தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள கம்பத்தின் மீது கி.பி.1374 ல் படையெடுத்தார். இப்பகுதியை ஆண்ட சோழ மன்னனை வென்று, இப்பகுதியில் பெரிய கோட்டை கட்டி ஆட்சி செய்ததால், கம்பம் என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.    
 
மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர், தனது படைத்தளபதி ராமபத்ர நாயக்கரை அனுப்பி கம்பம், கூடலூரை கைப்பற்ற பெரும் போர் ஏற்பட்டுள்ளது.போர் முடிந்த பின், கம்பத்தில் ஒரு கோட்டையை கட்டி, அந்த கோட்டைக்குள் கம்பராயப் பெருமாள், காசிவிஸ்வநாதர் கோயிலை கட்டினார் என்றும் கூறப்படுகிறது.

 
கோயிலை சுற்றி பெரிய கோட்டை கட்டப்பட்டு, அந்த கோட்டையில்  முன் பகுதியில் போர் வீரர்கள் தங்குவதற்கு கட்டிடங்களை கட்டியுள்ளார். அந்த கட்டிடங்கள் மீது, எதிரிகளை கண்காணிக்க கண்காணிப்பு கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த கண்காணிப்பு கோபுரங்களில் ஒன்று தற்போது மொட்டையாண்டி கோயிலாக உள்ளது.
இந்த கோயில் கம்பம் உத்தமபுரம் என்ற இரு கிராமங்களின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கிராமங்களையும் பிரிக்கும் மையக்கல் இங்கு உள்ளது. அத்தோடு விஸ்வநாதர் ஆட்சி காலத்தில் கம்பண நாயக்கர் , உத்தமநாயக்கர் என்ற இரண்டு ஜமீன்தார்கள், சகோதரர்களாக இருந்து இப்பகுதியை ஆண்டதாகவும், அவர்களின் நினைவாகவே கம்பம், உத்தமபுரம் என்று அழைக்கப்படுவதாகவும், சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எப்படி இருந்தாலும், ஊருக்கு மத்தியில் கோட்டைக்கோயில்,என்ற பெருமையை  
கம்பராயப்பெருமாள், காசி விஸ்வநாதர் கோயில் பெறுகின்றன