நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்

தன் எழுத்தில் உள்ள குறைகளையும் பாசாங்குகளையும் அடையாளம் கண்டு கொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது'' - இந்தச் சுட்டெரிக்கும் வரிகளுக்குச் சொந்தக்காரர், எழுத்தாளர் சுஜாதா. அவர் பிறந்த தினம் இன்று. 

இலக்கியங்களுக்குள் கோலோச்சியிருந்த எழுத்துகளை, தன் கற்பனையாலும் சிந்தனையாலும் நவீன உலகுக்குள் கொண்டுவந்து, இளைஞர்களுக்கு நளினம் பாய்ச்சியவர், சுஜாதா. 

அறுபதுகளில் ஆரம்பித்த அவருடைய எழுத்துப் பயணம், அவர் இறக்கும்வரை தொடர்ந்தது. கி.ரங்கராஜன் என்னும் இயற்பெயர்கொண்ட சுஜாதா, தன் மனைவியின் பெயரையே புனைபெயராக்கிக்கொண்டார். யாரும் பயன்படுத்தாத ஒரு புதிய மொழிநடையையும் கருப்பொருள்கள்கொண்டு எழுதுவதையும் அவர் உருவாக்கினார். அறிவியலுக்கும், இலக்கியத்துக்கும் புதிய பங்களிப்பைத் தந்தார். அவருடைய எழுத்து, தமிழுக்கு ஒரு பாய்ச்சல் என்றால் மிகையாகாது.

1980 களில் சுஜாதா கதையை படித்தவர்களுக்கு டச் ஸ்க்ரீன் ஃபோன்களும், எல்லா வேலையையுமே ஒரே மெஷின் செய்யும் என்ற சொல்லாடல்களும் கற்பனை உருவங்களாக நிச்சயம் பரிச்சயமாகியிருக்கும். கட்டுரைகள், கதைகளில் அறிவியல் சாதனங்களை சின்ன டாப்பிக்காக அல்லது வசனமாக பயன்படுத்திய சுஜாதா மொத்த அறிவியலையே  கதையாக்கியது, என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ வில். என் இனிய இயந்திரா கி.பி. 2020ல் நடக்கும்படி எழுதப்பட்ட பியூச்சரிஸ்ட் நாவல். மீண்டும் ஜீனோ அதன் சீக்வெல். இது எழுதப்பட்டது 1987ல்.

1980 களில் அவர் தமிழ் பத்திரிக்கை உலகில் நிகழ்த்தியது எல்லாம் பேனா கொண்டு நடத்திய சிலிக்கான் புரட்சி!

மெமரி சிப்கள், ஜீன் ஸ்டெம் செல்கள், ஹோலோகிராம், Heuristics என்ற விஞ்ஞான தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் ஹீரோ ஜீனோ. வெகுளியான நிலா, சர்வாதிகார ஜீவா, மனோ என சில கேரக்டர்களை கொண்டு மொத்த கதையுமே ஒரு சிந்தெடிக் கிராமத்தில் நடப்பதாக எழுதியிருப்பார். ஹீரோ ஜீனோ,  நாவல் முழுக்க ஐசக் அஸிமோவின் ரோபோ விதிகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கும்.

தானியங்கி கதவுகள், ஆக்சஸ் கார்டுகள், சி.சி.டி.வி கேமராக்களின் அடுத்த தலைமுறையான வி.வியும், லேசர் துப்பாக்கிகளும், காந்த கார்களும் கதை முழுக்கவே அதன் சயின்டிஃபிக் ஃபார்முலாக்களோடு சிந்தடிக் நகரத்தை வலம் வந்துக்கொண்டிருக்கும். நாம் இன்று பயன்படுத்தும் அத்தனை முன்னேறிய தொழில்நுட்பங்களும் ஏதோ ஒரு வகையில்  இக்கதையில் இடம்பெற்றிருக்கும்.  

நாம் வாக்களிக்க பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கும் குழுவிற்கு தலைமை தாங்கியவர் எழுத்தாளர் சுஜாதா.

அவர் இளைஞர்களுக்குச் சொன்ன  10 கட்டளைகள் மிகப் பிரபலமானவை

என் இனிய எந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்