நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

அரைஞாண் கயிறு எதற்கு அணிய வேண்டும்?

அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க.. 

உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா

நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது 

ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது.

இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன. இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

இப்போது வெள்ளி,தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விசயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.

அரைஞாணைப் பெரும்பாலும் ஆடைக்குள் மறைவாகத் தான் அணிந்திருப்பர். இப்படி அணிவதே கண்ணியமாகக் கருதப்படுகிறது. முன்பு இடையில் அணியப்படும் வேட்டி, கோவணம் போன்ற ஆடைகளை இறுக்கிக் கட்ட இது பயன்பட்டது இன்னும் பயன்படுகிறது சிலருக்கு.

இந்து சமயத்தில் ஒருவர் இறக்கும் போதே அரைஞாணை அகற்றுகிறார்கள் என்பதால், ஒருவர் அரைஞாணை அணியாமல் இருப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்புவதில்லை. தவிர, அரைஞாண் உடலை இரண்டாகப் பகுத்துக் காட்டி, உடை போல் செயல்படுவதால் அரைஞாண் மட்டும் அணிந்தோர் அம்மணமாக இருப்பதாகவும் கருதப்படுவதில்லை. அரைஞாண் அணியாமல் உடையும் இல்லாமல் இருப்பவர்களை முழு முண்டமாக இருப்பதாகக் குறிப்பிடுவதையும் இன்னும் கிராமங்களில் காணலாம்.

உடை, சமயம் சார் தேவைகள் போக, நடைமுறை காரணங்களுக்காகவும் இதை அணிந்தார்கள்/அணிகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, கிராமப் புறங்களில் நீச்சல் பழக்கி விடுபவர் அரைஞாணில் சேலை, வேட்டியைக் கட்டிப் அதைப் பிடித்து நீச்சல் பழக்கி விடுவார்கள். நீச்சல் அறியாத பிள்ளைகள் நீர் நிலைகளில் மூழ்க நேர்ந்தாலும், பற்றி இழுப்பதற்கு ஏதுவாக அரைஞாண் உதவியது. சாவிக் கொத்து, முள்வாங்கி போன்றவற்றை கோர்த்து வைத்துக் கொள்ளவும் அரைஞாண் உதவியது.


குறிப்பு: இந்த பகுதியில் வெளியிடப்படும் தகவல்கள் நான் செவி வழியாக கேட்டதும், ஊடகம் வழியாக அறிந்ததும், புத்தகங்களின்  வழியாக படித்தவை. இதன் நோக்கம் நமக்கு பரிட்சயமான வார்த்தைகள், வாக்கியங்கள் அல்லது பலமொழிகளின் உண்மையான விளக்கத்தை அறியவே, ஆதலால் இதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் உடனடியாக எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி