நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

வாசிக்கப்படாத புத்தகங்கள் - Anti Library

ண்பர்கள் ஒவ்வொருமுறையும் என் அறைக்கு வரும்போதெல்லாம் கேட்கும் ஒரு விஷயம், “இவ்வளவு புக்ஸ் வச்சுருக்கிற, எல்லாம் படிச்சிட்டியா?” என்பதுதான். நானும் அவர்களிடம் “இதில் நான் வாசித்ததை விட வாசிக்காத புத்தகங்களே அதிகம்” என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்வேன். புத்தகம் வாசிக்கும் பழக்கமிருக்கும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் கேள்விதான் இது.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன், கல்லூரி கேண்டீனில் காபி குடித்துக் கொண்டிருக்கையில் என்னுடைய பேராசிரியர் ஒருவருடன் புத்தக வாசிப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்தான் இந்த Anti-Library பற்றி கூறினார். அதாவது, நம்முடைய நூலகத்தில் அல்லது நம்முடைய சேமிப்பில் இருக்கும் புத்தகங்களில் வாசிக்கப்படாமல் இருக்கும் புத்தக சேகரிப்பை Anti-Library என்று குறிப்பிடுகிறார்கள். அதென்ன Anti-Library என்று நூல்பிடித்து சென்று தேடும்போது சில தெளிவுகள் கிடைத்தது.

இந்த Anti-Library குறித்து நஸீம் தலேப் என்ற எழுத்தாளர் தன்னுடைய “The Black Swan” புத்தகத்தில் எழுதியுள்ளார். உம்பர்த்தோ ஈகோ என்ற எழுத்தாளருடைய வாழ்வில் நடந்த சம்பவமாக இதை தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். உம்பர்த்தோ அடிப்படையில் ஒரு ஆராய்ச்சியாளர். தனக்கென சொந்த நூலகம் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார். அதில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட நூல்களை சேமித்து வைத்திருந்தார். அவருடைய வீட்டிற்கு வரும் உறவினர்களும் நண்பர்களும் அவரிடம் கேட்கும் முதல் கேள்வி, ”ஏய் உம்பர்த்தோ, இத்தனை புத்தகங்களையும் நீங்கள் வாசித்துவிட்டீர்களா?”. இதுபோன்ற கேள்விகள் தனக்கு மிகவும் கோபமூட்டுவதாக இருக்கிறது என்று சொல்லும் உம்பர்த்தோ, தனிபட்ட நூலகம் என்பது என்னிடம் இத்தனை புத்தகங்கள் இருக்கிறது பார் என்று படோடபம் காட்டுவதற்கு இல்லை, தமக்கு தேவையான புத்தகங்களை தேவையான சமயங்களில் எடுத்து பார்த்துக்கொள்வதற்கே என்கிறார். அதை நீங்கள் உடனடியாக, கண்டிப்பாக வாசித்தே தீர வேண்டும் என்பதும் இல்லை. 


சமீபத்தில் எழுத்தாளர் அழகியசிங்கர் தன்னுடைய பதிவில், 16 வருடங்களுக்கு முன்பு வாங்கி வைத்திருந்த கு.ப.ரா குறித்த புத்தகம் ஒன்றை ஏதோ சில காரணங்களால் வாசிக்காமல் வைத்திருந்து, சாரு நிவேதிதாவின் சமீபத்திய உரையைக் கேட்ட பின்னரே வாசித்ததாக குறிப்பிட்டிருந்தார். இதுதான் Anti-Library-க்கான பொறுத்தமான எடுத்துக்காட்டு. 

ஒரு சிறந்த நூலகம் என்பது எப்போதுமே வாசிக்கப்படாத புத்தகங்களால் நிரம்பி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. வயதாக வயதாக அனுபவமும் வாசிப்பும் பரந்துப்பட்டதாக மாறும். அந்த சமயத்தில், வாசிக்காமலையே அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் நம்மை பயமுறுத்தும். ”உனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணாதே, நீ தெரிந்துக்கொள்ள வேண்டியது இன்னும் இவ்வளவு இருக்கு” என்று மிரட்டும். 

நம்மிடம் இருக்கும் பொதுவான பிரச்சனை இதுதான், நமக்கு தெரிந்த அல்லது நாம் அறிந்த ஒரு சிறிய உலகத்தை மட்டும் பார்த்துவிட்டு இந்த பிரபஞ்சத்தையே அளந்துவிடுவோம். அத்தகைய மனநிலையிலிருந்து வெளியேறி நாம் அறியாதது யாதென அறிந்துக்கொள்வதற்கு இந்த Anti-Library பெரிதும் உதவுகிறது.

குறிப்பு:
உம்பர்த்தோ ஈகோ – இத்தாலிய நாவலாசிரியர்.
நஸீம் தலேப் – அமெரிக்க லெபானிய எழுத்தாளர்.
அழகியசிங்கர் – எழுத்தாளர், விருட்சம் சிற்றிதழின் ஆசிரியர்.
சாரு நிவேதிதா – பின்நவீனத்துவ எழுத்தாளர்.