நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

கொலை வாளினை எடடா ...பாவேந்தர்

கொலை வாளினை எடடா மிகு
கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா!


அலைமா கடல் நிலம் வானிலுன்
அணி மாளிகை ரதமே
அவை ஏறிடும் விதமே யுன
ததிகாரம் நிறுவுவாய்!

வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?
உலகாள உனது தாய் மிக
உயிர் வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கலையே வளர் தொழில் மேவிடு!
கவிதை புனை தமிழா!
கடலே நிகர் படைசேர் கடு
விடநேர் கருவிகள் சேர்!

நிலமே உழு நவதானிய
நிறை யூதியம் அடைவாய்;
நிதி நூல் விளை! உயிர் நூல் உரை
நிச நூல் மிக வரைவாய்!

தலையாகிய அறமே புரி
சரி நீதி யுதவுவாய்!
சமமே பொருள் ஐனநாயகம்
எனவே முரசறைவாய்!

இலையே உணவிலையே கதி
இலையே எனும் எளிமை
இனி மேலிலை எனவே முரசறைவாய் முரசறைவாய்!

                                                           -பாவேந்தர் பாரதிதாசன்
 

தேவார பதிகம் - கணவன் மனைவி உறவு மேம்பட ...

பதிகம்: (2:16)
தலம்திருமணஞ்சேரி
பண்இந்தளம்
சுவாமிபெயர்: மணவாளநாயகர்
தேவியார்: யாழ்மொழியம்மை  

பாடல்:
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று எய்து,
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி,
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லைபாவமே.

பொருள் : 
கூரிய அம்பினால் முப்புரங்களையும் எய்து அழித்துகுயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு கூற்றில் உடையவனாகிமயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி 
நின்றார்க்குப் பாவம் இல்லை.

இடுக்கி அணை நிரம்பியது வெள்ள அபாயத்தில் கேரளா

கேரளா மாநில இடுக்கி அணையை காப்பாற்ற முல்லைப்பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் நீர் தேக்க கூடாது என்ற வழக்கை கேரளா வாபஸ் பெற வேண்டிய நிலைமை இப்போது. 142 அடிக்கு மேல் முல்லைபெரியாரில் நீர்தேக்கினால் மட்டுமே இடுக்கி அணையை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் கேரளாவுக்கு
முல்லை பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீரை தேக்க முடியும்.
காரணம் இதுதான்.
முல்லை பெரியாறு அணைக்கு கீழே இருப்பது இடுக்கி அணை.
இந்த இடுக்கி அணை ஆசியாவிலிருக்கும் உயரமான வளைவு அணைகளுள் (Arch dam) இது இரண்டாவது மிகப்பெரிய அணை. இந்த அணை விவசாய தேவைக்கோ, குடிநீர் பயன்பாட்டிற்கோ கட்டப்பட்ட (1973) அணை அல்ல . 167.68 மீட்டர் உயரம் கொண்ட இந்த பிரமாண்ட அணை 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 72 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் அளவிற்கு பெரியது. ஏறக்குறைய நம் மேட்டூர் அணையின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கை இந்த அணை கொண்டிருக்கிறது.
750 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க கட்டப்பட்ட இந்த அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அரபிக் கடலில் நேரடியாக கலந்துவிடும். இந்த அணை கட்டப்பட்ட பிறகு இதுவரை இரண்டுமுறை (1992 & 2018) மட்டுமே அதன் முழு கொள்ளளவை அடைந்திருக்கிறது.
இந்த அணை நிரம்பாததற்கு காரணம் மேலேயிருக்கும் முல்லை பெரியாறு அணை. முல்லை பெரியாறு அணையின் தண்ணீர் குடிநீருக்கும், விவசாய பாசனத்திற்கும் தமிழகத்தின் பக்கம் திருப்பிவிடப்படுவதால் இடுக்கி அணை நிரம்ப போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.
முல்லை பெரியாறு அணை இல்லாவிட்டால் இடுக்கி அணை வருடம் முழுவதும் நிறைந்திருக்கும். அதற்கு தடையாக இருப்பது முல்லை பெரியாறு அணை. அதனால்தான் அந்த அணையை அகற்ற அணை பலவீணமாக இருக்கிறது, அணையில் ஓட்டை விழுந்துவிட்டது என பல கதைகளை சொல்லி 155 அடி தண்ணீர் தேக்கப்பட்டு வந்த முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க செய்துவிட்டது கேரளா.
பிறகு தொடர்ச்சியான சட்ட போராட்டத்தால் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கும் உரிமையை பெற்றுக்கொடுத்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 
இடுக்கி அணையில் நீர் நிரம்ப வேண்டும், அதற்கு இடைஞ்சலாக இருக்கும் முல்லை பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்பதற்காக முல்லை பெரியாறு அணை பற்றிய வதந்திகளை கேரள அரசும், கேரள ஊடகங்களும் தொடர்ச்சியாக செய்து வந்தன.
1973ல் கட்டப்பட்ட இடுக்கி அணை 6 ஆண்டுகளாகியும் நிரம்பாததால் 1979ல் மலையாள மனோரமா பத்திரிக்கை ஒரு வதந்தியை மக்களிடையே பரப்பி பீதியாக்கியது. முல்லை பெரியாறு அணையில் ஒரு யானை நுழைந்துபோகும் அளவிற்கு ஓட்டை விழுந்துவிட்டது. அதனால் எப்போது வேண்டுமானாலும் அந்த அணை உடையலாம். அணை உடைந்தால் முல்லை பெரியாறு ஆற்றை ஒட்டியிருக்கும் மக்கள் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு அரபிக் கடலில் பிணமாக மிதப்பார்கள் என்ற வதந்தியை மக்களிடையே பரப்பியது. மக்கள் பீதியடைந்து முல்லை பெரியாறு அணைக்கு எதிராக போராட ஆரம்பித்தார்கள்.
அவர்கள் முல்லை பெரியாறு அணை உடையப் போவதாக சொல்லி 39 ஆண்டுகளாகிறது. தற்போதுவரை முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக தமிழக, கேரள அரசின் சார்பில் நிபுணர்களை கொண்டு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை கொடுத்திருக்கிறது.
ஆனாலும் கேரள ஊடகங்களும், கேரள அரசும் திருந்தவில்லை. தொடர்ந்து மக்களிடையே பயத்தை கிளப்ப 'டேம் 999' என்ற படத்தை எடுத்து மக்களை அச்சுறுத்தினார்கள். Dam 999 என்ற தலைப்பே விஷமத்தனமானது. Dam 999 என்பது முல்லை பெரியாறு அணையின் ஆயுள். முல்லை பெரியாறு அணையை கட்டி அந்த இடத்தை பயன்படுத்திக்கொள்ள பிரிட்டிஷ் அரசு திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் 999 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தது. அதைதான் மலையாளிகள் படத்திற்கு பெயராக வைத்தார்கள்.
விஷமத்தனமான கருத்துக்களோடு இருமாநில மக்களிடையே பகைமையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 
ஆனால் உண்மையில் அவர்கள் வதந்தி பரப்புவதுபோல முல்லை பெரியாறுஅணை உடைந்தாலும் கேரள மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. காரணம் முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவை விட மிகப்பெரியது இடுக்கி அணை. முல்லை பெரியாறு அணையின் அதிகபட்ச நீர் தேக்குத்திறன் 15 டி.எம்.சி ஆனால் இடுக்கி அணையின் கொள்ளளவு 72 டி.எம்.சி.
முல்லை பெரியாறு போன்ற நான்கு அணைகளின் தண்ணீரை இடுக்கி அணை என்ற ஒரே அணையில் தேக்கிடமுடியும். மேலும் முல்லை பெரியாறு அணை அமைந்திருப்பது மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் பகுதியில், இடுக்கி அணை இருப்பது அதன் அடிவாரத்தில்.
முல்லை பெரியாறு அணை உடைந்தாலும் வெள்ளம் பாய்ந்துவரும் வழியில் எந்த ஊர்களும் இல்லை. மலைக்கு நடுவிலும், காடுகளுக்கு இடையேயும் பாய்ந்து வந்து இடுக்கி அணையில் அந்த தண்ணீர் சேர்ந்துவிடும்.
இந்த உண்மை கேரள அரசிற்கும், மலையாள ஊடகங்களுக்கும் நன்றாக தெரியும் ஆனாலும் வெறும் அரசியல் ஆதாயத்திற்காக முல்லை பெரியாறு அணையை எரிச்சலோடு பார்க்கிறார்கள்.
தற்போது 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை இரண்டாம் முறையாக முழுமையாக நிறைந்திருக்கிறது. இடுக்கி அணை தண்ணீரால் வெள்ளத்தில் மிதக்கிறது அலுவா நகரம்.
தற்போது அந்த மக்கள் முல்லை பெரியாரிலிருந்து இடுக்கி அணைக்கு தண்ணீர் வந்துவிடக்கூடாது என பிராத்தனை செய்கிறார்கள்.
ஆனால் நாம் உதவி செய்ய நினைத்தாலும் நம்மால் எதுவும் செய்ய முடியாது. 142 அடிவரை மட்டுமே முல்லை பெரியாறுஅணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அதற்கு மேல் தண்ணீரைதேக்க வேண்டும் என்றால் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்திருக்கும் வழக்கை வாபஸ் பெற வேண்டும். அவர்கள் வழக்கை வாபஸ் பெற்றால் மட்டும்தான் கர்னல் ஜான் பென்னி குயிக் கட்டிக்கொடுத்த 155 அடிவரையிலான அணையில் தண்ணீரை தேக்க முடியும் 

ஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் ஏன் கூழ் ஊற்றுகிறார்கள்

அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. 

வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற பாதிப்பை தடுக்கவும் தங்களை பாதுகாத்துகொள்ளவும் நோய்எதிர்ப்பு சக்திமிக்க கேழ்வரகு / கம்பை பயன்படுத்தியுள்ளனர். கம்பு குளிர்ச்சியைத் தரக்கூடியது. 

சத்தையும் குளிர்ச்சியையும் தரக்கூடிய இவற்றில்தான் கூழ் காய்ச்சி ஊற்றியிருக்கிறார்கள். மேலும்  அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும். அதனால் மாரி எனும் மழையை அவர்கள் தெய்வமாக உருக் கொண்டார்கள்.

அதிலும் விவசாய வேலை இல்லாத மாதமான ஆடி மாதத்தில் உற்சவங்களை நடத்தினார்கள். சித்திரையில் அறுவடை முடிந்து வைகாசி, ஆனி மாதம் வரை நெல்லோ, தானியங்களோ இருப்பு வைத்திருக்கும் ஏழைத் தொழிலாளர்கள், ஆடியில் அது தீர்ந்து உணவுக்குத் தடுமாறுவார்கள். பஞ்சமும் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பஞ்சத்தைத் தீர்க்கவும்தான் இந்த ஆடிமாத வழிபாடு உதவியிருக்கிறது.

அப்போதைய மக்களின் பிரதான உணவு கூழ்தான். அந்தக் கூழ் கிடைக்காமல் பட்டினி சாவுகள் நடக்கும் ஆடி மாதத்தில்  கோயிலில் வைத்துக் கூழ் ஊற்றினார்கள். நாகரிக வளர்ச்சியில் கூழ் என்பது மறக்கடிக்கப்பட்டு, அரிசி உணவான கஞ்சியாக மாறியது. 

அதேபோல் கஞ்சியில் சேர்க்கும் பாசிப்பயறு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம், தேங்காய் துருவல், மல்லித்தழை, கறிவேப்பிலை, மாங்காய் என்று எல்லாமும் மருத்துவ குணங்களைக் கொண்ட பொருட்கள்தான். இப்படிச் சத்தான, நோய்களை தீர்க்கும் பொருட்களைக் கொண்ட உணவுதான் கூழும் கஞ்சியும். பஞ்ச காலத்தில் கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி ஊற்றுவதை நம் தமிழகம் பலமுறை பார்த்திருக்கிறது. அதற்கு அடிப்படை கூட கோயில்களில் கஞ்சி ஊற்றுவதுதான்.

எவ்வளவு பெரிய மருத்துவ அறிவோடு இந்த வழக்கத்தை கடைபிடித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்

தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்துக்கான பொன்விழா


மாநில அரசியல் களத்தில் அதிர்வலைகளை உருவாக்கிய நிகழ்வு அது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார், தமிழ்நாடு பெயர் சூட்டும் கோரிக்கை உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், அந்தக் கோரிக்கையை முதல்வர் காமராஜர் ஏற்கவில்லை. உண்ணாவிரதத்திலேயே உயிர் பிரிந்தது சங்கரலிங்கனாருக்கு.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’ என்று பெயர் வைத்த காங்கிரஸ் கட்சி, ஏன் மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்கத் தயங்குகிறது என்பது புரியாத புதிராகவே இருந்தது. சட்ட மன்றத்துக்குள் நுழைந்ததும் தனது கோரிக்கையை மீண்டும் திமுக வலியுறுத்தியது. 1957 மே 7 அன்று ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தது திமுக.

இறங்கிவந்த அரசு

தீர்மானத்துக்கு ஆதரவாக வெறும் 42 வாக்குகளே கிடைத்தன. எதிர்த்து விழுந்த வாக்குகள் 127. திமுகவின் முதல் தீர்மானம் முழுமையான தோல்வி. இருப்பினும், மேடைகளில் ‘தமிழ்நாடு’ பெயர் கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்தது திமுக. 1961 ஜனவரி 30 அன்று சோஷலிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் சின்னதுரை, ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தை வெற்றிபெறச் செய்யும் வகையில், ஆளுங்கட்சியினர் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை சட்ட மன்றத்துக்கு உள்ளும் புறமும் எழுந்தது. குறிப்பாக, தமிழரசு கழகத்தினர் சட்ட மன்றத்துக்கு வெளியே நின்று குரலெழுப்பினர்.
அது தொடர்பான விவாதத்தை ஒரு மாதத்துக்குத் தள்ளிவைக்குமாறு கோரினார் முதலமைச்சர் காமராஜர். இது தாமதிக்கும் தந்திரம் என்று சொல்லி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மூன்று நாட்களுக்கு இதே நிலைமை நீடிக்கவே, காமராஜர் அரசு கொஞ்சம் இறங்கிவந்தது. தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்குப் பதிலாக, நிர்வாகரீதியிலான கடிதப் போக்குவரத்துகளில் ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடுவதற்குச் சம்மதித்தது. ஆனால், அந்த முடிவு எதிர்க்கட்சிகளுக்கு முழுமையான திருப்தியைத் தரவில்லை. அரை மனதுடன் ஏற்றுக்கொண்டாலும், முழு வெற்றியை நோக்கிச் செல்வதற்கு ஆயத்தமாகவே இருந்தனர்.

கம்பனும் சேக்கிழாரும்

இப்படி மாநில அளவில் ‘தமிழ்நாடு’ கோரிக்கை இருந்த நிலையில், அதனை இந்திய அளவுக்குக் கொண்டுசென்றவர்களுள் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா முக்கியமானவர். ஆம், தமிழ்நாடு பெயர் சூட்டல் கோரி இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார் குப்தா. மாநில அரசு சட்டம் நிறைவேற்றி, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுப்பதைவிட, நேரடியாக மத்திய அரசே செய்துவிட சட்டத்தில் இடமிருக்கிறது என்பதால், அந்த முயற்சியை முன்னெடுத்தார் பூபேஷ் குப்தா.
அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, குப்தாவின் மசோதாவை வெகுவாக ஆதரித்துப் பேசினார். அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், “சுமார் ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு வரைக்கும் ஒன்றுபட்ட தமிழ்நாடு என்ற ஒன்று இருந்ததே இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதான் இருந்தது. வரலாற்றுரீதியாக நியாயப்படுத்த முடியாதபோது, எதற்காகப் புதிய பெயரை உருவாக்க முனைகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அந்தக் கேள்விக்கு, பரிபாடல், பதிற்றுப்பத்து, மணிமேகலை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களில் இருந்தெல்லாம் சான்றுகளை எடுத்துச்சொல்லி பதிலளித்த அண்ணா, கம்பனும் சேக்கிழாரும் தமிழ்நாடு என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அப்போதும் திருப்தியடையாத ஓர் உறுப்பினர், “தமிழ்நாடு என்று பெயரிடுவதால் உங்களுக்கு என்ன லாபம்?” என்று கேள்வி எழுப்பினார்.
“பார்லிமெண்ட்டை, லோக்சபா என்று பெயர் மாற்றியதில் என்ன லாபம் கண்டீர்கள்? கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை ராஜ்யசபா என்று மாற்றியதில் என்ன லாபம்? பிரசிடெண்ட்டை ராஷ்டிரபதி ஆக்கியதால் என்ன லாபம்?’’ என்றவர், ‘‘தமிழ்நாடு என்ற பெயரைத்தான் நீங்கள் மாநிலத்துக்குக் கொடுத்தாகவேண்டும். மாநிலத்தின் பெயருக்கும் அதன் தலைநகரத்தின் பெயருக்கும் வேறுபாடு இருக்க வேண்டும்” என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார். என்றாலும், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த அபரிமிதமான வலிமை காரணமாக ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்ற தனிநபர் மசோதா தோற்கடிக்கப்பட்டது.

தொடர் முயற்சி

பிறகு, மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து காமராஜர் விலகி, பக்தவத்சலம் முதல்வராகியிருந்த தருணத்தில் மீண்டும் ஒருமுறை, தமிழ்நாடு பெயர் சூட்டும் தீர்மானத்தைக் கொண்டுவந்தது திமுக. 23 ஜூலை 1963 அன்று திமுக சட்ட மன்ற உறுப்பினர் இராம.அரங்கண்ணல் கொண்டுவந்த அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய மாநில அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன், ‘‘தமிழ்நாடு என்று சொன்னால், வெளி உலகில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும்.. மெட்ராஸ் என்றால்தானே புரியும். அதுமட்டுமல்ல, மெட்ராஸ் என்று சொன்னால்தான், சர்வதேச அரங்கத்தில் கேட்கும் போது பெருமையாக இருக்கிறது” என்றார்.
அதுமட்டுமல்ல, ‘‘மாநிலத்தின் பெயரை மாற்றினால் பிற மாநிலத்துடனோ அல்லது வெளிநாட்டுடனோ போடப்பட்ட ஒப்பந்தங்களைத் திருத்த வேண்டியிருக்கும். அது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும்” என்றார். அதற்கு எதிர்வினை ஆற்றிய திமுக, “கோல்ட் கோஸ்ட் என்ற நாடு கானா என்று பெயர் மாற்றம் அடைந்தபோது, எந்தவிதப் பிரச்சினையும் எழவில்லை. ஒரு நாட்டுக்கே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், மாநிலத்துக்கு எப்படிப் பிரச்சினை எழும்?” என்று கேட்டது.
வாதங்கள் வலுவாக எடுத்துவைக்கப்பட்டபோதும் சட்ட மன்றத்தில் எண்ணிக்கை பலம் இல்லாததால், தீர்மானம் தோல்வியடைந்தது. ஆக, எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்விகண்ட நிலையில்தான் 1967-ல் ஆட்சியைப் பிடித்தது திமுக. அதே வேகத்தோடு பெயர் மாற்ற விவகாரத்தைக் கையில் எடுத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்பதைத் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானம் தயாரிக்கப்பட்டது.

பெயர் சூட்டினார் அண்ணா!

1967 ஜூலை 18 அன்று சட்ட மன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் முதலமைச்சர் அண்ணா. விவாதத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பி.ஜி.கருத்திருமன், மெட்ராஸ் என்பது உலகறிந்த பெயர். தமிழ்நாடு என்பது அந்தப் புகழை இனிமேல்தான் எட்டவேண்டும். ஆகவே, ‘தமிழ்நாடு - மெட்ராஸ் ஸ்டேட்’ என்று பெயர் வைக்கலாமே என்று யோசனை சொன்னார். என்றாலும், இறுதியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவருமே ஒருமித்த எண்ணத்துக்கு வந்திருந்ததால், தமிழ்நாடு என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. பிறகு பேசிய முதலமைச்சர் அண்ணா, “தமிழ்நாடு” என்று மூன்று முறை அண்ணா உச்சரிக்க, மூன்று முறையும் ‘வாழ்க’ கோஷம் எழுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் பங்களிப்பையும் தமிழரசு கழகத்தின் தலைவர் ம.பொ.சிவஞானத்தின் தொடர் முயற்சிகளையும் பங்களிப்பையும் பதிவுசெய்து பேசினார் முதலமைச்சர் அண்ணா. அதோடு, ‘‘நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம்முடைய மாநிலம் இருக்கும்” என்பதையும் தெளிவுபடுத்தினார். அதன் நீட்சியாக, ‘‘தமிழ்நாடு அரசு - தலைமைச் செயலகம்” என்ற புதிய பெயர்ப்பலகை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டது. அண்ணாவின் மனத்துக்கு நெருக்கமான கோரிக்கை நிறைவேற்றப்பட்டதன் பொன் விழாவைத் தற்போது கொண்டாடுகிறது தமிழ்நாடு அரசு!
- ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர். ‘திராவிட இயக்க வரலாறு’

சித்திரை 1, ஆடி 1, ஐப்பசி 1, தை 1 - திருவிழாக்களா?

சித்திரை 1, ஆடி 1, ஐப்பசி 1, தை 1 - இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா!
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா  என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று
ஆம்... 
சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும். அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்.
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்குனு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்.
சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(Summer Solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(Equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கல். (Winter Solistice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்.

மேட்டூர் அணை நீர்மட்டம் 94 அடி, நீர் இருப்பு 54 டிஎம்சி - ஒரு புரிதல்


கர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்?
இந்த 4 அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர்அணை ஒன்றே போதும்.. இவைகளை விழுங்க..

காவேரி நீர் பிரச்சனை என்றாலே உடனே செய்திகளில் அடிபடுவது இந்த 4-அணைகள்தான்.
1. கபினி அணையின் கொள்ளளவு 15.67 டிஎம்சி..
2. ஹேமாவதி நீர் தேக்கத்தின் கொள்ளளவு 35.76 டிஎம்சி..
3.ஹேரங்கி அணையின் கொள்ளளவு 8.07 டிஎம்சி...
4. கிருஷ்ண ராஜசாகர் அணையின் கொள்ளளவு 45.05 டிம்சி..
-என ஆக மொத்தம் 105.55 டிஎம்சி தண்ணீர்...
இவ்வளவு தண்ணிரையும் ஒரே நேரத்தில் திறந்துவிட்டால் கூட (திறக்க வாய்பில்லை என்பது வேறு)

நம்ம மேட்டூர் நீர் தேக்கத்தால் 93.4 டிஎம்சி. நீரை, அதாவது 90 விழுக்காடு தண்ணீரை தேக்கி வைக்க இயலும்.
அதாவது ஒரு TMC தண்ணீர் என்பது 'One Thousand Million Cubic Feet' அதாவது 100,00,00,000. எளிமையாக சொன்னால் 100 கோடி கன அடி நீர்..
ஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர். ஒரு டிஎம்சிக்கு 2,830 கோடி லிட்டர்.
அதாவது ஒரு டிஎம்சி தண்ணீரை பெப்சி கம்பெனிக்காரன் பாட்டிலில் அடைத்து, லிட்டர் 20 ரூபாய்க்கு விற்றான் என்றால், 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயை விற்று ஆட்டய போடலாம்.
அதே ஒரு டிஎம்சி தண்ணீரை அம்மா பாட்டிலில் அடைத்து வைத்து விற்றால் 28 ஆயிரத்து 300 கோடி ரூபாயை தேத்தலாம். அதாவது நமது டாஸ்மாக்கின் ஒரு வருட வருவாய்.
அதே ஒரு TMC தண்ணீரை வைத்து சென்னை மாநகருக்கு 34 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்தால்,12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளில் சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும்.
இப்போது எளிதாக புரிந்ததா ஒரு TMC தண்ணீர் என்றால் எவ்வளவு என்று?

அடுத்தது அணைகளின் கொள்ளளவை பார்த்தோமெனறால்..
கர்நாடகத்தின் கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த உயரம் 124 அடி.
அதன் தண்ணீர் கொள்ளளவோ 45.05 டிஎம்சி-மட்டுமே.
ஆனால் மேட்டூர் அணையின் உயரம் என்னவோ 120 அடி. ஆனால் அதன் கொள்ளளவோ 93.4 டிஎம்சி..
அதாவது கிருஷ்ண ராஜசாகர் அணையை காட்டிலும், நம்ம மேட்டூர் அணை இரண்டு மடங்கு கொள்ளவு உடையது...
மேட்டூரைப்போலவே 120 அடி உயரம் கொண்டது பவானிசாகர் அணை. ஆனால் இதன் கொள்ளளவு 32.8 டிஎம்சி.மூன்று பவானி சாகர்களை மேட்டூரில் வைக்கலாம்..
நம்ம சாத்தனூர் அணை 119 அடி உயரம். ஆனா கொள்ளளவு வெறும் 7.3 டிஎம்சி.

நிலைமை இப்படியிருக்க,
'இத்தனை அடி தண்ணீர் ஏறியது, அத்தனை அடி ஏறுகிறது' -என்று அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பத்தில் முழு பொருள் உள்ளதா?
நமது மேட்டூர் அணைக்கே வருவோம். அதில் 

50' அடிக்கு தண்ணீர் இருந்தால் 18 டிஎம்சி..
75' அடியை தொட்டால் 37 டிஎம்சி..
100' அடி என்று சொல்வார்களே, அதைத்தொட்டாலே 60 டிஎம்சி தான் நீர் இருக்கும்..
ஆனால் அடுத்த 20 அடியை தொட 33 டிஎம்சி தண்ணீர் வேண்டும்.
அதாவது மேட்டூர் அணை 100-லிருந்து முழுமையான 120 அடிக்கு போக, ஒரு பவானி சாகர் அணைக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் தேவை.

அணை குறித்த செய்தி என்றால், எளியோருக்கும் புரிகிற மாதிரி இருக்க வேண்டும் அல்லவா?
எவ்வளவு நீர் வருகிறது, எவ்வளவு நீர் திறந்து விடப்படுகிறது' என்பதோடு, அணையின் கொள்ளவு, நீர் எத்தனை விழுக்காடு இருக்கிறது என்று சொன்னால் எளிதில் புரிந்துவிடும்.

இன்று காலை (ஜூலை 17) பத்து மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94'  அடி...
நீர் இருப்பு 54 டிஎம்சி… மொத்த கொள்ளளவில் இது 57-விழுக்காடு...
அதாவது மேட்டூர் அணை பாதிதான் நிரம்பியுள்ளது..
‘’120' அடியில் 100' அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர் மட்டம்’’ என்றால் அது பரபரப்பு..
100' அடியை தொட்டாலும் அணை பாதிதான் நிரம்பியுள்ளது என்பது பரபரப்பில்லாத உண்மை.. அவ்வளவே...

(இந்த பதிவு மூத்த ஊடகவியலாளர் திரு.ஏழுமலை வெங்கடேசன் அவர்களின் கட்டுரையில் வெளியான புள்ளி விபரங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. அவருக்கு நமது நன்றி)

 

எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்

தன் எழுத்தில் உள்ள குறைகளையும் பாசாங்குகளையும் அடையாளம் கண்டு கொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது'' - இந்தச் சுட்டெரிக்கும் வரிகளுக்குச் சொந்தக்காரர், எழுத்தாளர் சுஜாதா. அவர் பிறந்த தினம் இன்று. 

இலக்கியங்களுக்குள் கோலோச்சியிருந்த எழுத்துகளை, தன் கற்பனையாலும் சிந்தனையாலும் நவீன உலகுக்குள் கொண்டுவந்து, இளைஞர்களுக்கு நளினம் பாய்ச்சியவர், சுஜாதா. 

அறுபதுகளில் ஆரம்பித்த அவருடைய எழுத்துப் பயணம், அவர் இறக்கும்வரை தொடர்ந்தது. கி.ரங்கராஜன் என்னும் இயற்பெயர்கொண்ட சுஜாதா, தன் மனைவியின் பெயரையே புனைபெயராக்கிக்கொண்டார். யாரும் பயன்படுத்தாத ஒரு புதிய மொழிநடையையும் கருப்பொருள்கள்கொண்டு எழுதுவதையும் அவர் உருவாக்கினார். அறிவியலுக்கும், இலக்கியத்துக்கும் புதிய பங்களிப்பைத் தந்தார். அவருடைய எழுத்து, தமிழுக்கு ஒரு பாய்ச்சல் என்றால் மிகையாகாது.

1980 களில் சுஜாதா கதையை படித்தவர்களுக்கு டச் ஸ்க்ரீன் ஃபோன்களும், எல்லா வேலையையுமே ஒரே மெஷின் செய்யும் என்ற சொல்லாடல்களும் கற்பனை உருவங்களாக நிச்சயம் பரிச்சயமாகியிருக்கும். கட்டுரைகள், கதைகளில் அறிவியல் சாதனங்களை சின்ன டாப்பிக்காக அல்லது வசனமாக பயன்படுத்திய சுஜாதா மொத்த அறிவியலையே  கதையாக்கியது, என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ வில். என் இனிய இயந்திரா கி.பி. 2020ல் நடக்கும்படி எழுதப்பட்ட பியூச்சரிஸ்ட் நாவல். மீண்டும் ஜீனோ அதன் சீக்வெல். இது எழுதப்பட்டது 1987ல்.

1980 களில் அவர் தமிழ் பத்திரிக்கை உலகில் நிகழ்த்தியது எல்லாம் பேனா கொண்டு நடத்திய சிலிக்கான் புரட்சி!

மெமரி சிப்கள், ஜீன் ஸ்டெம் செல்கள், ஹோலோகிராம், Heuristics என்ற விஞ்ஞான தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் ஹீரோ ஜீனோ. வெகுளியான நிலா, சர்வாதிகார ஜீவா, மனோ என சில கேரக்டர்களை கொண்டு மொத்த கதையுமே ஒரு சிந்தெடிக் கிராமத்தில் நடப்பதாக எழுதியிருப்பார். ஹீரோ ஜீனோ,  நாவல் முழுக்க ஐசக் அஸிமோவின் ரோபோ விதிகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கும்.

தானியங்கி கதவுகள், ஆக்சஸ் கார்டுகள், சி.சி.டி.வி கேமராக்களின் அடுத்த தலைமுறையான வி.வியும், லேசர் துப்பாக்கிகளும், காந்த கார்களும் கதை முழுக்கவே அதன் சயின்டிஃபிக் ஃபார்முலாக்களோடு சிந்தடிக் நகரத்தை வலம் வந்துக்கொண்டிருக்கும். நாம் இன்று பயன்படுத்தும் அத்தனை முன்னேறிய தொழில்நுட்பங்களும் ஏதோ ஒரு வகையில்  இக்கதையில் இடம்பெற்றிருக்கும்.  

நாம் வாக்களிக்க பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கும் குழுவிற்கு தலைமை தாங்கியவர் எழுத்தாளர் சுஜாதா.

அவர் இளைஞர்களுக்குச் சொன்ன  10 கட்டளைகள் மிகப் பிரபலமானவை

என் இனிய எந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மனுசபுத்தி தான் நிரத்தரம்

புத்திஷம், பெரியாரிஷம், கம்யூனிஷம் எல்லா இஷமும் பெயிண்டு தான். நீங்க என்ன தான் பெயிண்டு அடிச்சாலும் அது கொஞ்சகாலம் தான். அப்புறம் பெயிண்ட் உதிர்ந்து மனுசன் வெளிய வந்துருவான். மனுசபுத்தி மட்டும் தான் நிரத்தரம்

-எழுத்தாளர் பொ.வேல்சாமி

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்


பாவேந்தரை பற்றி 10-செய்திகள்...

01.கோழி, புறா, பசு மூன்று அவர் விரும்பியவை `டேய்என்பார் கோழியை. `வாம்மாஎன்பார் சேவலை `வீடு என்று இருந்தால் இம்மூன்றும் இருக்க வேண்டும்' என்று சொல்லித் தானும் வளர்த்து வந்தார்!

02. யார் பேசும்போது மூக்கின் மீது விரல்வைத்தபடியே உன்னிப்பாகக் கவனிப்பார். எழுதும்போது மை சிந்தி விட்டால் அதைப் பூவாக மாற்றிவிட்டுத்தான் எழுதுவார். பாயைத் தரையில் விரித்து, தலையணை மீது குப்புறப்படுத்தபடியேதான் எழுதுவார்!

03. 'உங்களுக்கு எல்லாம் தமிழை நான் வாரிக் கொடுகிறேன். எனக்கெல்லாம் தமிழை வாரிக் கொடுப்பவர் பாரதிதாசன் என்று பாராட்டியவர் கிருபானந்த வாரியார். ஆத்திகர்களையும் தனது கொஞ்சு தமிழால் ஈர்த்த நாத்திகர்!

04. புதுச்சேரியில் ஒரு முறை புயல் சுழன்றடித்தபோது இவரை ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்குத் தூக்கி எறிந்தது சூறாவளி. ஒரு முழு நாள் கழித்து வீட்டைத் தேடிக் கண்டு பிடித்து வந்தார். அவரது `பறந்து திரிந்த அனுபவங்களைக் `காற்றும் கனகசுப்புரத்தினமும் என்ற கட்டுரையாக வடித்தார் பாரதியார். அந்தக் கதையை மறுபடி மறுபடி சொல்லிக் கேட்டவர் அரவிந்தர்!

05. நாடு முழுவதும் நிதி திரட்டி 25 ஆயிரம் ரூபாயை இவருக்கு வழங்கினார் அண்ணா. `நான் கொடுக்க நீங்கள் வாங்கக் கூடாது என்ற அண்ணா. அந்தப் பணத்தைக் கையில் ஏந்தி நிற்க... பாரதிதாசன் எடுத்துக்கொண்டார்!

06. ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி புதுச்சேரி வந்தபோது, அவரை போலீஸீக்குத் தெரியாமல் கட்டுமரத்தில் ஏற்றி, நடுக்கடல் வரை கொண்டு சென்று வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்த அஞ்சாமைக்குச் சொந்தக்காரர்!

07. எப்போதும் பச்சை சால்வைதான் அணிவார். அதற்குள் ஒரு கத்தியும் ஒரு வாளும் வைத்திருப்பார். இரவில் எங்கு சென்றாலும் அதை மறக்காமல் எடுத்துச் செல்வார்!

08. புதுச்சேரி வேணு நாயக்கரின் சிலம்புக் கூடத்தில் சிலம்பம் கற்றார். குத்துச்சண்டையும் குஸ்தியும் தெரியும். அதற்காகவே உடும்புக் கறியை அதிகமாகச் சாப்பிட்டார். `உடல் நலனைப் பேணுதலே அனைத்துக்கும் அடிப்படை என்பார்!

09. `சுப்புரத்தினம் எனக்காக ஒரு பாட்டு எழுதேன் என்று பாரதியார் கேட்டுக் கொண்டதும் இவர் எழுதிய பாட்டுதான், `எங்கெங்கு காணினும் சக்தியடா!

10. பள்ளி ஆசிரியராக 37 ஆண்டுகள் இருந்தார். அவரை நிம்மதியாக ஓர் இடத்தில் பணியாற்றிவிடாமல் 15 பள்ளிகளுக்கு மாற்றிக்கொண்டே இருந்தார்கள், `அரசியல் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் என்னை மாற்ற மாட்டார்களாம். அரசியல் இல்லாமல் என்னால் எப்படி இருக்க முடியும்? என்று கொதித்தார்!’