ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால்
அம்மாவை மாற்ற தேவையில்லை
ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்
ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.
காலை வணக்கம் வார்த்தை எல்லாம்
கடல் கடந்து சென்றது
Good Morning என்ற வார்த்தையில் தான்
பல குடும்பம் விழிக்குது .
Fuck என்ற வார்த்தை கூட
பெருமை பொங்க சொல்வர்..
நாங்கள் ஓ... என்று ஆரம்பித்தால் மட்டும்
ஒழுக்கம் இல்லாதவர் என்பர்.
அந்நிய உணவில் தனி ருசிதான்
அதில் ஒன்றும் தவறில்லை
ஆயின் வறண்ட ரொட்டியை
திண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன?
பத்து வரியை படிக்க சொன்னால்
பல்லை இளித்து காட்டுவார்
ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கி
வைத்து அறிவாளி வேடம் போடுவார்.
முறுக்கும் சீடையும் கையில் தந்தால்
அலட்சியம் செய்து போவார்.
ஒரு Kurkure'வை வாங்கி கொண்டு
கோமான் போல திரிவார்..
நாகரீக பெண்கள் நடக்கும் விதத்தில்
அலப்பறை அதிகமாய் மின்னும்
நாலு வரி பேச தெரிந்துவிட்டால்
மனதில் சேக்சுபியர் என்று எண்ணம்.
பாரதி கவிதை பைந்தமிழ் நூலை
புரியாதவர் போல படிப்பார்..
Harry Potterஐ வாங்கி வைத்து
மேதாவி போல நடிப்பார்..
நண்பா தோழா என்பதை
பழமை சாயம் பூசுவார்
Bro Dude என்பதை எல்லாம்
புரியாமலே பேசுவார்
அன்பெனும் அம்மா
Mummy ஆனது
அழகிய தமிழ்மொழி
Dummyஆனது
ஆங்கிலம் என்பது
பெருமையானது.
நீங்கள் அலட்டிக்கொள்வது
மடமையானது.
அரசியலில் தான் விடுதலை பெற்றோம்
நம் அடிமை தனம் இன்னும் போகவில்லை
வளர்ச்சிக்கு தான் ஆங்கிலம்
அதை கவர்ச்சியாய் காட்டத் தேவையில்லை.
பெருமைக்கு பேசுவதை
குறைத்து கொள்ளுங்கள்
நம் பெருமை எல்லாம்
தமிழ்தான் உரைத்து சொல்லுங்கள் .
- வை . நடராஜன்